ஜீவி – 2 திரைப்பட விமர்சனம்

வருடத்திற்கு சுமார் இருநூறு படங்கள் வாரத்திற்கு சுமார் நான்கு படங்கள் என்று வெளியாகும்போது அவற்றில் தங்கள் படம் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இயக்குநரும் மெனக்கெடுவார்கள். அப்படி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் யோசித்ததன் விளைவாகவே, நட்பு, உறவு, காதல், துரோகம் ஆகிய உணர்வுகளோடு முக்கோண விதி என்றும் தொடர்பியல் விதி என்கிற புதிய சொல்லாடல்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் காட்டி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதைதான் ஜீவி 2.2019 ஆம் ஆண்டு வெளியான முதல்பாகத்தின் தொடர்ச்சியாக ஜீவி 2 வந்திருக்கிறது.முதல்பாகத்தைக் காட்டிலும் நடிப்பில் முன்னேறியிருக்கிறார் நாயகன் வெற்றி. கண்பார்வையற்ற மனைவியைக் கண்போலக் காக்கும் வேடத்தைச் சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.கண்பார்வையற்ற வேடத்தில் கனகச்சிதமாக நடித்திருக்கிறார் நாயகி அஸ்வினி.சாந்தமும் கருணையும் கொண்ட அவர் முகம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.இன்னொரு நாயகனாகப் படம் முழுக்க வரும் கருணாகரன் நன்று.அடுத்து நானா? என்று பதறிக்கொண்டே நாயகனின் எல்லாச் செயல்களுக்கும் துணையாய் நிற்கிறார்.நாயகனின் இன்னொரு நண்பராக வரும் முபஷ்ஷிர் திடீரென மரணமடைந்து கதையை மேற்கொண்டு நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார்.காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நாசர் நடித்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு அச்சுஅசலாக அவர்போலவே இருக்கும் அவர் தம்பி ஜவகர் நடித்திருக்கிறார். விசாரணை அதிகாரி வேடத்தை மிக இயல்பாகச் செய்திருக்கிறார்.ரோகிணி, ரமா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.பிரவீன்குமாரின் ஒளிப்பதிவு அளவாக அமைந்திருக்கிறது.கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை கதைக்களத்தின் தன்மைக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கிறது.எழுதி இயக்கியிருக்கும் வி.ஜே.கோபிநாத், வேகமும் விறுவிறுப்பும் முக்கியம் என்பதை மனதில் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்.தொடர்பியல் விதி எனும் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக இறுதிக்காட்சியை அமைத்திருக்கிறார்.ஜீவி 3 எப்போது என்று கேட்கவைத்திருப்பது ஜீவி 2 வின் வெற்றி.இப்படம் ஆஹா இணையத்தில் காணக்கிடைக்கிறது.TAGS: Aswini Film Review Jawahar Jiivi 2 Karunakaran Rohini V.J.Gopinath Vetri