மெயின் கதை இதுவாக இருந்தாலும் இதற்குள் மன்சூர் அலிகான் கோஷ்டி, சுனில் ரெட்டி–ஷாரா, கோவை சரளா- போலீஸ், கருணாகரன்–யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர் டீம், முனீஷ்காந்த்- காளி வெங்கட் குரல்களில் வரும் லெஃப்ட், ரைட் என பல கிளைக் கதைகளைத் திணித்து கலாட்டாவான காமெடி படம் தர முயன்றிருக்கிறார், அறிமுக இயக்குநர் மீரா மஹதி. அதுவே படத்துக்கு பலவீனமாக ஆகிவிடுகிறது.
‘இந்தப் படத்துல இன்னுமா லாஜிக் பார்க்கிறீங்க?’ என்று அவர்களே கேட்டுவிடுவதால், காமெடியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவலையில்லாமல் களமிறங்கி இருக்கிறார்கள். அதற்கேற்ப படத்திலும் திரும்பிய பக்கமெல்லாம் காமெடி தலைகள். இதில் சுனிலும் ஷாராவும் வரும் இடங்கள், எம்.எஸ்.பாஸ்கரிடம் சிக்கிக்கொண்டு சுனில் படும் அவஸ்தை, ‘நான் ராயர் பேசுறேன்’ என்று கோவை சரளாவிடம் மன்சூர் அலிகான் போலவே பேசி மாட்டிக் கொள்ளும் சிலர், எப்போதும் ஃபோன் பேசிக்கொண்டே அலையும் மன்சூர் டீமின் அடியாள் என சில இடங்கள் கொஞ்சம்சிரிப்பை வரவழைக்கின்றன.
காமெடி கதைக்குத் தேவையான ஒளிப்பதிவை கச்சிதமாகத்தந்திருக்கிறது கவுதம் ராஜேந்திரனின் கேமரா. வித்யாசாகரின் பின்னணி இசை கதையோடு ஒன்ற வைக்கிறது. அனிமேஷன் விஷயங்களை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள். கதையை முன்னும் பின்னுமாகச் சொல்லும் திரைக்கதை ரசிக்க வைத்தாலும் குழப்பத்தையே அதிகம் தருகிறது. அதில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் டக்கராக மாறியிருக்கும் இந்த டபுள்டக்கர்!