டிமான்டி காலனி-2 – திரைவிமர்சனம்

அருள்நிதி நடிப்பில்2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் டிமான்டி காலனி 2.பேய் மற்றும் திகில் படங்களின் தொடர்ச்சி அப்படியே இருக்கவேண்டுமென அவசியமில்லை என்பதைப் பல படங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப்படம் முதல்பாகத்தின் மிகச் சரியான தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது.

முதல்பாகத்தில் இறந்துவிட்ட அருள்நிதி,இந்த பாகத்தில் உயிரோடு வருகிறார்.அவர் மட்டுமன்று அவர் சகோதரர் என்று இன்னொரு அருள்நிதியும் வருகிறார்.இதெல்லாம் எப்படி? ஏன்? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் டிமான்டி காலனி 2
நேர்மறை நாயகனாக நடிப்பதைக் காட்டிலும் எதிர்மறை நிழல் படிந்த வேடம் நற்பெயரைத் தரும் என்று நம்பி நடித்திருக்கிறார் அருள்நிதி.அவர் நினைத்தது நடந்திருக்கிறது.பாடல்கள் மற்றும் சில காட்சிகளுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக இல்லாமல் இவர் இல்லாவிட்டால் திரைக்கதை இல்லை என்கிற வேடம் பிரியா பவானி சங்கருக்கு.அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர்.
முத்துக்குமார், அருண் பாண்டியன், சீன நடிகர் செரிங் டோர்ஜி,பிக்பாஸ் சீசன் 7 புகழ் அர்ச்சனா ஆகியோர் கொடுத்த வேடங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஹரீஷ்கண்ணன், இயக்குநரின் எழுத்துக்கு உயிர்கொடுக்க உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்.ஓட்டம்,வேக ஓட்டம்,மெது ஓட்டம் என கதையின் தன்மைக்குத் தக்கபடி காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், அளவுக்கதிகமான பின்னணி இசை கோர்த்து படத்தைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.திகில் படங்களில் அமைதிக்குப் பெரிய முக்கியத்துவம் உண்டு என்பதை உணர மறந்திருக்கிறார்.
படத்தின் தொடக்கத்தில் முதல்பாகத்தின் பாத்திரங்கள் இரண்டாம்பாகத்தோடு இணையும் வரையிலான காட்சிகள் மிகச் சிறப்பாக படத்தொகுப்பாளர் குமரேஷ்.டி முக்கிய காரணம்.
முதல்பாகக் கதையின் காலத்துக்கு முன்பே இப்பாகத்தின் கதை தொடங்குகிறது எனச் சிந்தித்து அதைச் செயலாக்கியிருக்கிறார் இயக்குநர் அஜய்ஞானமுத்து.ஆவியிடம் பேசுதல்,சீனத் துறவி, போர்த்துகீசிய நபர்,புத்தர் பூசை என நிறைய புதுவிசயங்களை வைத்து படத்தின் சுவாரசியத்தைக் கூட்ட முயன்றிருக்கிறார்.
அதில் அவருக்குப் பாதி வெற்றிதான் என்றாலும் இன்னொரு பாகமும் இருக்கிறது என்பது போல் முடித்திருப்பது அவருடைய தன்னம்பிக்கை.