‘டெவில்’ திரைப்பட விமர்சனம்

கணவரின் துரோகத்தால் விரக்தியில் இருக்கும் பூர்ணா, திரிகுணின் திடீர் நட்புடன் பயணிக்கிறார். இவர்களது நட்பின் நெருக்கம் அதிகரிக்கும் போது, பூர்ணா மீது திரிகுணுக்கு காதால் ஏற்படுகிறது.  பூர்ணாவும் அவருடைய பரிசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வரும் போது, அவருடைய கணவர் விதார்த் தான் செய்த தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். இதனால், தனது கணவன் மீது காதல் கொள்ளும் பூர்ணாவின் இல்லற வாழ்க்கை இனிமையாக மாறுகிறது. ஆனால், பூர்ணாவை மறக்க முடியாமல் திரிகுண் தவிக்கிறார். அவருடைய தவிப்பு பூர்ணாவின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே ‘டெவில்’ படத்தின் கதை.விதார்த், பூர்ணா மற்றும் திரிகுண் ஆகியோரை சுற்றி நகரும் கதையை இந்த மூன்று பேருமே தங்களது நடிப்பு மூலம் பலமாக தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். திருமணமான பெண் கணவரிடம் எதிர்பார்க்கும் விசயங்கள் நடக்காமல் போனால் எப்படி தவிப்பார், என்பதை தனது கண்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கும் பூர்ணா, மிஷ்கின் பட்டறையை தனது பள்ளி என்று சொன்னதில் தவறில்லை, என்பது அவருடைய ஒவ்வொரு அசைவுகளிலும் தெரிகிறது. ஏக்கம், தவிப்பு, காதல், கோபம், தடுமாற்றம் என அனைத்து உணர்ச்சிகளையும் அளவாக கையாண்டிருக்கும் பூர்ணா, படத்தின் பெரும்பகுதியை தன் தோள் மீது சுமந்திருக்கிறார்.
பூர்ணாவின் கணவராக நடித்திருக்கும் விதார்த், ஒரு சாதாரண வேடத்தில் நடித்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஒரே காட்சியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார். விதார்த்துக்கு இப்படிப்பட்ட கதபாத்திரம் புதிது என்றாலும், அதை புரிதலோடு செய்து கைதட்டல் பெறுகிறார்.
விதார்த் மற்றும் பூர்ணா ஆகியோருடன் போட்டி போடவில்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேடத்திற்கு சரியான நபர் என்று நிரூபிக்கும் வகையில் திரிகுண் நடித்திருக்கிறது.
மூன்று கதாபாத்திரங்களை தவிர படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த கதாபாத்திரங்களும் இல்லை என்றாலும், கவனிக்கும் வகையிலான சிறு வேடத்தில் நடித்திருக்கும் மிஷ்கின், அந்த வேடத்தின் மூலம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது பெருத்த ஏமாற்றம்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் இரவு நேரக் காட்சிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்முல் கடத்தி நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்.இசையமைப்பாளர் மிஷ்கினின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும்படி இருக்கிறது. ஆனால், பின்னணி இசையில் சொதப்பியிருக்கிறார். குறிப்பாக வயலின் இசைக்கருவியும், அது எழுப்பும் ஒலியும் இனிமையாக இருந்தாலும், அந்த இசைக்கருவி மீது வெறுப்பு ஏற்படும் வகையில் மிஷ்கின் அளவுக்கு அதிகமாக வாசித்திருக்கிறார். இரண்டாம் பாதி பின்னணி இசையில் வயலின் வாசிப்பை குறைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்.ஒரு சாதாரண கதை என்றாலும் அதை சுவாரஸ்யமாக சொல்வதற்கு படத்தொகுப்பாளர் இளையராஜா அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.
முக்கோண கள்ளக்காதல், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தான் படத்தின் மையக்கரு என்றாலும், அதை உணர்வுப்பூர்வமாக பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா.சூழ்நிலை காரணமாக மனம் தடுமாறி தவறான வழியில் கதாபாத்திரங்கள் பயணித்தாலும், பார்வையாளர்கர்களுக்கு அவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்படாத வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை மிக நாகரீகமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஆதித்யா, தவறான தொடர்புகள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு, தவறு செய்பவர்களை மன்னிப்போம், மறப்போம் என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
தான் சொல்ல வந்தது இது தான், என்று தெரிந்த பிறகு ரசிகர்களை கடைசி அரை மணி நேரம் உட்கார வைக்க வேண்டும், அதே சமயம் படத்தை பாசிட்டிவாக முடிக்க வேண்டும் என்று யோசித்திருக்கும் இயக்குநர் ஆதித்யா, அதற்காக செய்த மேஜிக்கில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லாதது படத்தின் பலவீனம்.  தம்பதிகளுக்கு அறிவுரை சொல்லும் கதையாக இருந்தாலும், பெண் என்பவள் பொருள் அல்ல, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஆதித்யா, அதை தனது குருநாதர் பாணியில் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று பாராட்டுப் பெறுகிறார்.