தமிழ் சினிமாவும் தமிழகஅரசியலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே 1967 முதல் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. சினிமாவில் தான் எழுதிய வசனங்கள் மூலம் திமுக தலைவர் அமரர்மு. கருணாநிதி திராவிட அரசியல் பேசினார். அது அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்த திமுக ஆட்சிக்கு வருவதற்கு ஏணிப்படியாக இருந்தது. அதன் பின்னர் தமிழகத்தை அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தேர்தல் காலங்களில் திரை கலைஞர்களை தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்தி கொண்டன. தனியார் தொலைக்காட்சி இந்தியாவில் தொடங்க அனுமதிக்கப்பட்டு, தமிழில் சன், ராஜ், ஜெயா, விஜய் தொலைகாட்சிகள் தங்களது ஒளிபரப்பை தொடங்கியபோது திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமை பிரதானமாக தேவைப்பட்டது. படங்கள் வங்குவதில் போட்டி இருந்தாலும் படத்திற்கான விலையை தீர்மானிப்பதில் இவர்களுக்கிடையில் ஒற்றுமை இருந்தது என தயாரிப்பாளர்கள் கூறியது உண்டு. ஆட்சிமாற்றத்திற்கு ஏற்ப முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமைகள் கையகப்படுத்தப்பட்டது.
பா. ரஞ்சித்துக்கு நெருக்கடி கொடுக்கவே தங்கலான் படத்திற்கு எதிராக டிமான்டி காலணி 2 படத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை குறித்து தெரிந்து கொண்ட உதயநிதி, வாரிசு படத்திற்கு எதிராக துணிவு படத்தினை ரிலீஸ் செய்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் வாரிசு படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கையை விடவும் துணிவு படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் அதிகம். இதேநிலை தங்கலான் படத்திற்கும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்த ஆண்டுஅடுத்து வரும் மாதங்களில் வெளியாக உள்ள கோட்,அமரன், வேட்டையன், தக்லை ஃப், விடாமுயற்சி, ஆகிய முண்ணனி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் அந்நிறுவணத்தை சார்ந்தவர்களே வெளியிட உள்ளனர். இதனால் திரையரங்குகள் தரப்பில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கூறுவதற்கும், அவர்களது படங்களுக்கு திரையரங்கு ஒதுக்கீடு செய்வதற்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுப்பார்கள். இதனால் அந்தகன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் ரகுதத்தா இரண்டு படங்களும் தங்கலான் படத்திற்கு அதிக நெருக்கடி கொடுக்க முடியாது என்ற நம்பிக்கையில் பா.ரஞ்சித் தரப்பில் இருந்தனர். இந்த நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த டிமான்டி காலனி – 2 படத்தின் அதிரடியான டிரைலைரை நேற்று மாலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் ஆகஸ்ட் 15ல் படம் திரைக்கு வருகிறது என அறிவித்தனர். இதனால் தமிழ்சினிமா விநியோகம், திரையிடல் அரசியல் காரணங்களுக்காக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் மீண்டும் கையில் எடுக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது என்கிறது தமிழ்சினிமா வட்டாரம். படைப்பு ரீதியாக தங்கலான், டிமான்டி காலனி இருபடங்களும் வெவ்வேறு கதை களம் கொண்டது. படத்தின் இயக்குநர்களும், நடிகர்களும்(அருள்நிதி, விக்ரம்) படைப்புகளை உருவாக்குவதில் தீவிரமானவர்கள். கதாபாத்திரத்திற்கு தங்களை முழுமையாக அர்பணிப்பவர்கள் . ஆனால் அரசியல் இரு தரப்பையும் நேரடியாக மோத வைக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படமும், விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா படமும் நேருக்கு நேர் மோதின. அப்போது அது இயல்பான போட்டியாக பார்க்கப்பட்டது. இரண்டு படங்களும் வசூல் அடிப்படையில் வெற்றி பெறவில்லை.தற்போது அவர்கள் மீண்டும் இந்த ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி வெவ்வேறு கதாநாயகர்கள் நடித்த படங்களின் மூலம் நேருக்கு நேர் மோதவுள்ளனர். ஜெயிக்க போவது படைப்பா?பழிவாங்க துடிக்கும் அரசியலா? சினிமா பார்வையாளன் ஆதரவு யாருக்குஎன்பதற்கு ஆகஸ்ட் 15 வரை காத்திருப்போம்