கலைஞர் மு. கருணாநிதியின் குடும்ப வாரிசு என்கிற அடையாளம், பின்புலத்துடன் சினிமாவில்வம் சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. வழக்கமாக ஆக்க்ஷன் திரைக்கதைகளில் நடித்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் கதாநாயகன்கள் நிரம்பிய சினிமாவில் தனிப்பாதையில் பயணித்து வருபவர் அருள்நிதி. தனக்காக கதையை வடிவமைக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் அருள்நிதி இதுவரை நடித்துள்ள படங்கள் அனைத்தும் கதையை மையமாக கொண்ட, டிமாண்டி காலனி,
மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன், தேஜாவு என தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் நடித்து வருபவர் அருள்நிதி இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம்பாகம் எட்டு வருடங்களுக்கு பின் இந்த வருடம்ஆகஸ்ட் 15 அன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கியஅஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார்.
‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். விக்ரம், பா.ரஞ்சித், G.V. பிரகாஷ் கூட்டணியில் 160 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தங்கலான் திரைப்படத்துடன் ஆகஸ்ட் 15 அன்று 290 திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான விளம்பரங்கள், அதிகப்படியான திரையரங்குகள் என தங்கலான் திரைப்படம் ஆதிக்கம் செலுத்தும் சூழலில் டிமாண்டி காலனி – 2 தாக்குப் பிடிக்குமா என்கிற கேள்விகள் எழுப்பபட்ட நிலையில் படம் வெளியான முதல் நாள் 290 திரையரங்குகளின் மூலம் 3.62 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து திரையரங்க வட்டாரத்தையும், எதிர்மறையான விமர்சனம் செய்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது டிமாண்டி காலனி – 2
ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது டிமாண்டி காலனி – 2 தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள திரையரங்குகளில் ஓடாத படங்களுக்கு கூட வெற்றி நிகழ்வுகளை முதல் நாள், மூன்றாம் நாள் கேக் வெட்டி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் டிமாண்டி காலனி – 2 வசூல் அடிப்படையில் வெற்றியை உறுதி செய்த பின் படக்குழு கதாநாயகன் அருள்நிதியுடன் நேற்றைய (17.8.2024) தினம் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளது. ப்ரியா பவானி சங்கர் நடித்தால் படம் ஓடாது என்கிற விமர்சனங்களுக்கு இப்படத்தின் வெற்றி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. விக்ரம் நடித்த தோல்வி படமான கோப்ரா படத்தை இயக்கியஅஜய் ஞானமுத்து டிமான்டி காலனி – 2 பட வெற்றியின் மூலம் மீண்டு வந்திருக்கிறார். அதுவும் அவரது தோல்வி பட கதாநாயகன் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்துடன் போட்டியில் களமிறங்கிய டிமான்டி காலனி- 2 படத்தின் மூலம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில்600க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான தங்கலான் முதல் நாள் மொத்த வசூல் 11 கோடி ரூபாய், 290 திரைகளில் வெளியான டிமான்டி காலனி- 2 மொத்த வசூல் 3.70 கோடி ரூபாய். அடுத்தடுத்த நாட்களில் டிமான்டி காலனி வசூல் அதிகரித்து வருவதுடன், காட்சிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.