திருப்பூர் சுப்பிரமணி தயவில் மத கஜ ராஜா வெளியீடு

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,வரலட்சுமி,அஞ்சலி,சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா.இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம்.ஆனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களால் அப்படம் வெளியாகவில்லை.

இந்தப்படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்தார் விஷால்.அவர் முயற்சி பலிக்கவில்லை.இப்படம் வெளியாகவில்லை என்கிற கோபத்தில்தான் விஷால் சொந்தப்பட நிறுவனம் தொடங்கினார்.

இந்தப்படத்தைத் தயாரித்த நிறுவனம் அதன்பின் செயல்படவே முடியாமல் போனது.

இவை எல்லாவற்றிற்கும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தால் ஏற்பட்ட பெருநட்டம்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2013 இலிருந்து அவ்வப்போது இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படும் ஆனால் வெளியாகாது.

இந்நிலையில் இப்போது திடீரென இவ்வாண்டு பொங்கலையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என ஜனவரி 3 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு ஆண்டுகளாக நீடித்த சிக்கல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதா? எப்படி திடீரென இவ்வறிவிப்பு வெளியானது?

இப்பட வெளியீட்டுக்கு சுமார் பதினைந்து முதல் பதினாறு கோடிவரை தேவை என்கிற நிலை.அந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரும் தொகை.இப்போது வியாபார எல்லைகள் விரிவடைந்திருப்பதால் இத்தொகை சிறிதாகியிருக்கிறது.

இப்போது இந்தப் படத்தை வெளியிடும் பொறுப்பை திருப்பூர்சுப்பிரமணியம் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.அவர் பொறுப்பெடுத்து யார் யாருக்குப் பணம் தர வேண்டுமோ? அவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு பேசிவருகிறாராம். கொடுக்க வேண்டிய தொகையில் பாதியைப் பெற்றுக் கொண்டு ஒப்புதல் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

சம்பந்தப்பட்டவர்களும் அதற்குச் சம்மதம் சொல்லியிருக்கிறார்களாம்.

அதனால் இப்போது சுமார் ஏழு கோடி இருந்தால் படத்தை வெளியிட்டுவிடலாம் என்கிற நிலை.இத்தொகைக்கும் திருப்பூர்சுப்பிரமணியம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.பொருத்தமான வெளியீட்டுத் தேதியில் படத்தை வெளியிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்களாம்.இந்த நேரத்தில்,பொங்கல் வெளியீடு

என்று சொல்லப்பட்ட விடாமுயற்சி பின்வாங்கியதும் பொங்கல் வெளியீடு என்று அறிவித்திருக்கிறார்கள்.

இப்போது பனிரெண்டாம் தேதி என்று அறிவித்திருப்பதை மாற்றி பத்தாம் தேதியே படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதோடு இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டுப் பொறுப்பை ரெட்ஜெயண்ட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றும் சொல்லப்படுகிறது.

இவை இரண்டும் நடந்துவிட்டால் இம்முறை நிச்சயம் படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.