இந்நிலையில், ஊர், பெயர் தெரியாத முதியவர் ஒருவர் (பாரதிராஜா), பல லாட்டரி சீட்டுக்களைவாங்குகிறார். ஆனால், கையிலிருந்த பணம் தொலைந்துவிட்டதால், நாளை பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், அதுவரை லாட்டரி சீட்டைபத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் சொல்லிவிட்டுச் செல்கிறார். எதிர்பாராத வகையில்அந்த லாட்டரி சீட்டு ஒன்றுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது.
இப்போது அந்த லாட்டரி சீட்டுஅந்தப் பெரியவருக்குச் சொந்தமா, அவர் பணமே கொடுக்காததால் கடைக்காரரான சமுத்திரக்கனிக்கே சொந்தமா என்ற குழப்பம் உண்டாகிறது. அதைத் தொடர்ந்து மாணிக்கம் எடுக்கும் முடிவு என்ன, அவரின் குடும்ப உறுப்பினர்கள் நிர்ப்பந்திப்பது என்ன என்பதை மெலோ டிராமாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.
நேர்மை, தெளிவு, பக்குவம், பொறுப்பு, அன்பு என கதாபாத்திரத்தைத் தன் அனுபவ நடிப்பால், பார்வையாளர்களுக்கு நெருக்கமாக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.அமைதியான பெண்ணாகவும், பொறுப்பான அம்மாவாகவும் வந்தாலும், தேவையான இடங்களில் தேவையான அவதாரங்களையும் எடுத்து, படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் அனன்யா. கோபத்தையும், ஆற்றாமையையும் ஒரே சேர மனதிற்குள் குமைந்துகொள்ளும் இடத்தில் தன் கதாபாத்திரத்தையும் ஆழமாக்கியிருக்கிறார் அனன்யா. முதுமையின் நடுக்கம், வெகுளித்தனம், வைராக்கியம் போன்றவற்றை தன் உடல்மொழியால் கொண்டுவந்து, அசரடிக்கிறார் பாரதிராஜா.
இடுக்கியின் குளுமையோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை தன் ப்ரேம்களாலும், லாங் ஷாட்களாலும் கடத்தி, படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.எம்.
இரண்டாம் பாதியில் வரும் பரபர காட்சிகளும் பதற்றத்தைக் கூட்டியிருக்கின்றன. மாணிக்கம் கதாபாத்திரத்திற்கான பின்கதை யூகிக்கும்படி இருந்தாலும், கதைக்கருவிற்கான நியாயத்தைச் செய்திருக்கிறது.ஆனால், தம்பி ராமையா காட்சிகள், சாம்ஸ், ஶ்ரீமன், கருணாகரன் ஆகிய கதாபாத்திரங்களின் காட்சிகள், யானை காட்சிகள் என ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் அபாயப் பள்ளங்களில் சிக்கி, திணறலுடனே நகர்கிறது திரைக்கதை. சோசியல் மீடியா டிரெண்டிங், நியூஸ் சேனல் விவாதம், உருக்கமான ஸ்பீச், முதல்வர் வரும் காட்சிகள் என க்ளைமாக்ஸில் யதார்த்தம் காணாமல் போய், அதீத நாடகத்தனமே மிஞ்சி நிற்கிறது.