இப்படத்தை தயாரிப்பாளர்கள் G.P.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பலவித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா, இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
முக்கியமான கதாப்பாத்திரங்களில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.
இவர்களுடன் தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு.. ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.
‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குநரான நந்தா பெரியசாமி, இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார்.
பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
குமுளி… தேக்கடி… மூணாறு பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும்… அந்தந்த வட்டார மொழியோடு… தங்களது சொந்த குரலிலேயே பேசியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெறும் வசன உச்சரிப்புகளோடு இல்லாமல் ஆன்மாவின் குரலாக பேசியிருப்பது பார்வையாளர்களை படத்தோடு ஒன்ற வைக்கும்.
ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக இந்த ‘திரு.மாணிக்கம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.