இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவியாளரும் பாடலாசிரியராக அறியப்பட்டவருமான விஷ்ணுஎடவன் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
அந்தப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பதாகவும் அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் இருந்தது.
அந்நிறுவனம் இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டது.
அதன்பின் அந்தப்படத்தைத் தயாரிக்க முன்வந்தது செவன்ஸ்கீரின் ஸ்டுடியோ.இதற்காக அலுவலகம் அமைத்து வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தில் கவினை நடிக்க வைக்கத் திட்டமிட்டு அவரை அணுகியிருக்கிறார்கள்.தன்னை விட வயது மூத்த அழகியைக் காதலிக்கும் கதை என்பதால் அதில் நடிக்க கவின் ஒப்புக்கொண்டாராம்.
ஆனால், அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.அதற்குக் காரணம் நடிகர் கவின் கேட்கும் சம்பளம்தான் என்கிறார்கள்.
இந்தப்படத்தில் நடிக்க எட்டு கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் கவின்.அதோடு அதற்கான ஜிஎஸ்டி வரியையும் தயாரிப்பு நிறுவனமே செலுத்த வேண்டும் என்றும் அவர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
அவர் கேட்ட சம்பளமே முந்தைய படங்களைக் காட்டிலும் நான்குமடங்கு அதிகம் அதோடு ஜிஎஸ்டி வரியும் சேர்ந்தால் இன்னும் கூடுதலாகும் என்பதால் தயாரிப்பாளர் லலித்குமார் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.
அவர் தரப்பிலிருந்து இந்தப்படத்தில் இந்த வேடத்தில் நடிப்பவருக்கு நான்கு கோடி மட்டுமே தர முடியும் என சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வளவு குறைவாக வாங்கிக் கொள்ள முடியாது என்றுகவின் தரப்பும் பிடிவாதமாக இருப்பதால் இது தொடர்பாக முடிவு எட்டப்படாமல் இருக்கிறதென்கிறார்கள்.
இதனால் ஒருபக்கம் இந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகர்களைத் தேடும் வேலையும் இன்னொரு பக்கம் கவின் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே சமரசம் ஏற்படுத்தி அவரையே நடிக்க வைக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறதாம்.