நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நாளில் அவர் தன்னுடன் படப்பிடிப்பில் இருந்தார் என இயக்குநரும், நடிகருமான வினீத் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் பூதாகாரமாக வெடித்துள்ளன. இதுவரை 17-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் துபாயில் வைத்து தன்னை நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன்படி ஊனுக்கல் காவல்துறையினர் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலியல் குற்றம் புரிந்ததாக சொல்லப்படும் நாளில் நிவின் பாலி எங்களுடன் தான் இருந்தார் என வினீத் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர், “சம்பந்தப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டுள்ள 2023-ம் ஆண்டு டிசம்பர் 14, 15,ஆகிய தேதிகளில் கொச்சியில் நிவின் பாலி எங்களுடன் தான் இருந்தார். ‘வருஷங்களுக்கு ஷேஷம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம் அது. இதனை சரி பார்க்க வேண்டுமென்றால், அங்கு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் நிவின் பாலியின் பெயரில் அறை புக் ஆகியிருக்கும். அதே போல பொதுமக்கள் சூழ கொச்சியில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கிருக்கும் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஆக நிவின் பாலி மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை” என தெரிவித்துள்ளார்.