நேசிப்பாயா – திரைப்பட விமர்சனம்

நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி, இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் இருவரும் நடித்திருப்பதால் ஊடக வெளிச்சம் கிடைத்தபடம் நேசிப்பாயா.

நீண்ட வருடங்களுக்கு பின் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனை நேசிப்பாயா பூர்த்தி செய்திருக்கிறதா ? பார்க்கலாம்….

தொலைக்காட்சி செய்தி மூலம்தனது முன்னாள் காதலி தியா (அதிதி ஷங்கர்) போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டதை அறிகிறார். கதாநாயகன் ஆகாஷ் முரளி இதனையடுத்து அவரைக் காப்பாற்ற போர்ச்சுகல் செல்ல முடிவெடுத்துக் கிளம்புகிறார் ஆகாஷ் முரளி.
இந்தப் பயணத்தில் அவர்களுக்குள் காதல் எப்படி மலர்ந்தது, எதனால் பிரிந்தார்கள் என்ற பிளாஷ்பேக் கதையைச் சொல்லி, தியா இப்போது எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காதலும், திகிலும் கலந்த கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்விஷ்ணுவர்த்தன்.
பார்த்தவுடன் காதல்என்கிற காலாவதியாகி போன  கதாநாயகன் வேடத்தில் ஆகாஷ் முரளி. நாயகியைக் காதல் செய்யச் சொல்லி அவர் செய்யும் சேட்டைகளில் சேட்டை மட்டுமே இருக்கிறதே தவிர நடிப்பு இல்லை. சண்டைக் காட்சிகளில் முயற்சி  தெரிந்தாலும் முகபாவனைகளில் கடைசி வரையிலும் நடிப்பதற்கான முயற்சியில் தோல்வியடைகிறார் ஆகாஷ் முரளி.
 தான் சம்பந்தபட்ட ஒவ்வொருகாட்சியிலும் தேவைக்கு அதிகமாக வைத்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் கையால் சைகை செய்து நடிப்பில் ‘ஓவர் டோஸ்’ ஏற்றியிருக்கிறார் நாயகி அதிதி ஷங்கர். அதிலும் சிறையில் உண்மையெல்லாம் சொல்லும் இடத்தில் அவர் அப்பாவி என்றாலும் நடிப்பிலிருக்கும் செயற்கைத்தனம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பார்வையாளன் மேல் பாய்ச்சுகிறது.
 சரத்குமார், குஷ்பு, பிரபு, ராஜா என்றுநட்சத்திர பட்டாளமே படத்திலிருந்தும் அனைவருமே வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
‘யுவன் ஷங்கர் ராஜா ‘சொல்’, ‘தொலஞ்ச மனசு’ போன்ற ஹிட் பாடல்களை அவர் கொடுத்தாலும் அவை படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. பின்னணி இசைக்கு ஏற்ற காட்சிகள் பெரிதாக வேலை செய்யாததால் அதுவும் குளத்துத் தண்ணீரில் சேர்த்த பாலாகக் காணாமல் போகிறது.
ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிசன் படத்தின் தரத்தை உயர்த்த கடுமையாக உழைத்திருக்கிறார். ஒளியுணர்வு, காட்சி கோணங்கள் எல்லாமே கச்சிதமான அளவுகோலில் இருக்கின்றன.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் கத்திரி போட வேண்டிய பல காட்சிகள் இருந்தும் அதை அப்படியே விட்டிருக்கின்றார்.
பைக் துரத்தல், சண்டைக் காட்சிகளின் வடிவமைப்புகளில் ஸ்டன்ட் இயக்குநர் ஃபெடரிகோ கியூவா குறையில்லாத பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

படம் தொடங்கியது முதல் பார்வையாளனைவிட்டு விலகிச் செல்ல அத்தனை முயற்சிகளையும் எடுக்கத் தொடங்குகிறது. நாயகிக்கு நாயகன் மேல் காதல் வந்ததாக எழுதப்பட்டிருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் அபத்தமாக, முதிர்ச்சியற்றதாக எழுதப்பட்டிருக்கிறது.

படத்தின்முதன்மை கதாபாத்திரங்கள் இருவரும் நடிப்பேனா என அடம்பிடித்து “எங்களை நேசிப்பாயா” என்று பார்வையாளர்கள் பக்கம் திரும்புவதாக இருக்கிறது காட்சியமைப்பு.
காதலிக்காக வெளிநாடு சென்று தேடும் காதலன் என்கிற அளவுக்கான காதலின் தாக்கத்தை ஒரு காட்சி கூட கடத்தவில்லை. இதற்கு நடுநடுவே வரும் பாடல்கள் சோதனை மேல் சோதனையாக பார்வையாளர்களை பாடாய்ப்படுத்துகின்றன.

நீதிமன்றவிசாரணை காட்சிகளாவது சற்றே புதிர்களை உண்டாக்கி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் இரண்டாம் பாதி தொடங்கியதுமே மறைய தொடங்குகிறது.
நாயகன் வெளிநாட்டில் இருக்கும் டானின் சகோதரியைக் காப்பாற்றியதால் உண்டான பழக்கத்தை வைத்து ‘அந்த ஆட்டோக்கார தம்பி எங்கே’ என அவரையே மீண்டும் மீண்டும் அழைத்து வந்து உதவ வைத்திருக்கிறார்கள்.
கதை எப்போதெல்லாம் நகராமல் நிற்கிறதோ அப்போதெல்லாம் இதை இயக்குநர் விஷ்ணுவர்தன் செய்திருப்பது பார்வையாளர்களைக் குறைத்து மதிப்பிடும் எழுத்துக்குச் சாட்சியாகிறது.
நாயகன் செய்யும் ஒவ்வொரு செயல்களும் தப்பாகவே இருக்க அதனை எப்படி நியாயப்படுத்துவது என வசனத்திலும், இசையிலும் பாடாய் பட்டிருக்கிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக ஆடம்பரமாகக் காட்சியளிக்கும் படம், திரைக்கதையாக அவஸ்தையை மட்டுமே தருவதால் ஏனோ நேசிக்க முடியவில்லை.