படையாண்ட மாவீரா திரைப்பட விமர்சனம்.

ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வதுதான் பயோபிக் படம்.அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு,அவரைப் பற்றி இதுவரை மக்கள் கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் சுக்குநூறாக உடைப்பதென்பது சாதாரணமானதல்ல.அந்த நிகழ்வை நிகழ்த்திக் காட்டியிருக்கும் படம் படையாண்ட மாவீரா.

பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புகளை வகித்தவர் காடுவெட்டி குரு.தான் பிறந்த வன்னிய சமூகத்துக்காக களப் போராளியாக தீவிரமாகப் பாடுபட்டவர். அதிமுகவிற்கு அவரை கட்சிமாற வைக்க மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் முதல்வராக இருந்தபோது முயற்சி செய்ததாக கூறப்பட்டது. தான் சார்ந்த வன்னிய சமூகம் சார்ந்த கட்சியில் இருந்து அதிமுகவிற்கு மாற மறுத்தவர்.

அதனால் சட்டத்தின் பார்வையில் அவர் குற்றவாளி என்றே ஆளும்தரப்பால் சித்தரிக்கப்பட்டவர்.
அதனால்அதிகார வர்க்கம் என்ன சொல்கிறதோ? அதுதான் வரலாறு என்றாகி போனது.அப்படி காடுவெட்டி குரு பற்றி அதிகார வர்க்கத்தால் சித்தரிக்கப்பட்டதை மாற்றி சரித்திரம் படைக்க முயன்றிருக்கும் படம்தான் படையாண்ட மாவீரா.
காடுவெட்டிகுரு வேடத்தை ஏற்று நடித்திருக்கும் வ.கெளதமன், உணர்ச்சிப் பிழம்பாக வெடித்திருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கும் அவர் பாசக்காட்சிகளில் பனிமழை பொழிகிறார்.காதல் காட்சிகளில் ஒன்றிப் போக முடியவில்லை. நிஜத்திலும் அவர் ஒரு போராளீ என்பதால் திரையிலும் அது சரியாக வெளிப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடாவுக்கு குறைந்த காட்சிகள்  என்றாலும் வருகிற காட்சிகளில் நிறைவாக இருக்கிறார்.

சிறுவயது குருவாக நடித்திருக்கும் வ.கெளதமனின் மகன் தமிழ் கெளதமனும்,அப்பாவுக்குத் தப்பாத பிள்ளையாக இருந்து ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு முழுநியாயம் செய்திருக்கிறார்.

கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,அந்த வேடத்துக்காக அளவெடுத்துத் தைத்த சட்டை போல் இருக்கிறார்.

ஆடுகளம் நரேன்,சரண்யா பொன்வண்ணன்,இளவரசு, மன்சூரலிகான், மதுசூதனராவ் உள்ளிட்டு படத்தில் இருக்கும் அனுபவ நடிகர்களால் படத்துக்குப் பலம்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் நன்று.பாடல்வரிகள் ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்துக்குமானதாக அமைந்திருக்கிறது.சாம்.சி.எஸ் பின்னணிகாட்சிகளுக்குத் தக்கபடி இசையமைத்திருக்கிறார்.

கோபி ஜெகதீசுவரன்  உழைப்பில் ஒளிப்பதிவால் படம் வண்ணமயமாக இருக்கிறது.

ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் பொருத்தமாக இருக்கிறது.

பால்முரளிவர்மனின் வசனங்கள், காடுவெட்டிகுருவின் உண்மை வரலாற்றை உரக்கச் சொல்லும் வண்ணம் அமைந்திருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் வ.கெளதமன் தான் எழுதி இயக்கியிருக்கிறார்.பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதைப் போல்,இப்படத்தில் ஒரு கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதோடு தான் சார்ந்தசமூகத்துக்காகவும் கடமையாற்றியிருக்கிறார்.