படை தலைவன் – திரைப்பட விமர்சனம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவளம்காத்தல், விலங்குகள் நலன், விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சமகால பிரச்சினைகளை பேசியுள்ள படம் படைதலைவன்.
தான் வளர்க்கும் யானை கடத்தப்படுகிறது. அதனை மீட்க போராடுகிறார் சண்முகப்பாண்டியன் அந்தப் போராட்டத்தில் சமகால இந்திய அரசியலில் மையம் கொண்டுள்ள வனவளம், பழங்குடி மக்கள் வாழ்வாதாரம், விலங்குகள் பாதுகாப்பு என பலவும் வசனங்களாக வந்து போகிறது.
யானை பயிற்றுவிப்பாளரான சண்முக பாண்டியன், ஒரு யானையை குட்டியிலிருந்து வளர்த்து வருகிறார். ஒரு கூட்டம் அந்த யானையைத் திருடிக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைகிறார்கள்.அதை மீட்கக் காட்டுக்குள் போகிறார் சண்முகபாண்டியன்.
அங்கு வன தேவதையை வழிபடும் மக்களை ஒரு குழு மிரட்டி அடிபணிய வைத்திருப்பதை அறிகிறார். அந்த மக்கள் விடுதலைக்காகவும் போராடுகிறார்.
சண்முகபாண்டியன் விஜயகாந்த் போன்றே யானைக்கு நிகராக இருக்கிறார்.யானையுடனான காட்சிகளில் பாசத்தைக் காட்டுகிறார்.எதிரிகளுடனான மோதலில் எரிமலையாக வெடிக்கிறார்.

கதாநாயகியாக யாமினிசந்தர் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு அவருக்குக் காட்சிகள் குறைவு.அதிலும் தன்னுடைய இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், வில்லனாக நடித்திருக்கும் கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி,ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

நவீன தொழில்நுட்ப உதவியுடன் விஜயகாந்த்தும் படத்தில் இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமார் அவருடைய உழைப்பில் அசாம் காடுகளும் பொள்ளாச்சி பசுமைகளும் யானையின் குறும்புகளும் கண்களில் நிறைகின்றன.

இளையராஜாவின்பின்னணி இசை கதைக்களத்துக்கேற்ப அமைந்திருக்கிறது. மேத்யூவின் சண்டைப்பயிற்சி வியக்க வைக்கிறது.

இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவின் திரைக்கதை மற்றும் வசனங்கள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.அன்பு இயக்கியிருக்கிறார்.சண்முகபாண்டியனை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தி இருக்கிறார்.தலைப்புக்குப் பொருத்தமான கதையை எடுத்துக் கொண்டதோடு காட்சிகளையும் சிறப்பாக அமைத்திருக்கிறார்.திரைக்கதையில் இருக்கும் பலவீனங்களைத் தாண்டி படத்தில் பேசப்படும் அரசியல் உயர்ந்து நிற்கின்றன