வெறுப்பை விதைப்பதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்று விஜய்சேதுபதி குரலில் தொடங்கும் பரோல் திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையால் கவனம் ஈர்த்திருக்கிறது.கோவலன் கரிகாலன் ஆகியோரது அம்மா ஆராயி ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல அடுக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையால் படம் சுவாரசியமாக நகர்கிறது.கரிகாலனாக நடித்திருக்கும் லிங்கா, கோவலனாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.கார்த்திக், ஆராயியாக நடித்திருக்கும் ஜானகிசுரேஷ் ஆகியோர் பாத்திரங்களின் தன்மையறிந்து நடித்து அவற்றிற்கு உயிர்கொடுத்திருக்கின்றனர்.நாயகிகளாக வரும் கல்பிகா, மோனிஷாமுரளி ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.வழக்கறிஞராக வரும் விநோதினி, வில்லனாக வரும் மேக்மணி உள்ளிட்ட நடிகர்களும் இயல்பாக இருக்கிறார்கள்.மகேஷ் திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு வடசென்னையின் இண்டுஇடுக்குகளில் பயணித்தாலும் தெளிவாகவும் நிறைவாகவும் இருக்கிறது. நெடுஞ்சாலைக்காட்சிகள் காட்டுக்குள் நடத்தும் துரத்தல்கள் ஆகியனவற்றில் ஆச்சரியம் கொள்ள வைத்திருக்கிறார்.ராஜ்குமார் அமல் இசையில் கதையை நகர்த்திச் செல்லும் பாடல்கள் கேட்டு இரசிக்க வைக்கின்றன. கதைக்களத்துக்குத் தேவையான பின்னணி இசை அமைந்திருக்கிறது.முனிஸின் படத்தொகுப்பு மாறுபட்ட பார்வை அனுபவத்தைக் கொடுக்கிறது.ஒரு கத சொல்லட்டா சார், ஓர் உண்மையான கத சொல்லட்டா சார் எனச் சொல்லி சொல்லி விரியும் காட்சிகளில் இயக்குநர் துவாரக்ராஜாவின் ஆளுமை தெரிகிறது.சிறுவர் சிறைக்காட்சிகள், கொலைக்காட்சிகள், சண்டைக்காட்சிகள் ஆகியனவற்றில் இருக்கும் அளவுக்கதிகமான வன்மம் வக்கிரஎண்ணம் ஆகியன பலவீனம்.வடசென்னை மக்களின் வாழ்வியல், ஒரு வீட்டுக்குள் இருக்கும் மூவரின் மன உணர்வுகள், குறிப்பாகப் பெண்களின்உணர்வுகள்,கரிகாலன் வாழ்வில் நடக்கும் யாரும் கவனிக்க விரும்பாத இருண்ட பக்கங்கள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தியிருப்பது பலம்