V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரித்திருக்கும் படம் ‘நாற்கரப்போர்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்
ஸ்ரீ வெற்றி இயக்கியுள்ளார்.
குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது.
இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின்,முக்கிய வேடத்தில் லிங்கேஸ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
ஆகஸ்ட்-9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,
“இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநரும் அந்த கதையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். இங்கே வெற்றி தோல்வி என்பது சகஜம்.. நாம் நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்று தான் பார்க்க வேண்டும். அதன் பிறகு அது ரசிகர்கள் கையில். இங்கே நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் முதல் படத்திலேயே நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த அனுபவங்கள் தான் அவர்கள் முதலீடு. அதனால் விட்டதை விட்ட இடத்தில் தான் பிடிக்க வேண்டும். எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும்..இந்த படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகை அபர்ணதி மிக சிறந்த நடிகை தான். ஆனால் என்ன வருத்தம் என்றால் அவர் இந்த விழாவிற்கு வரவில்லை. நடிகைகள் புரமோசனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் தொடர்கதையாகி, அது ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது. அபர்ணதியை இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்த போது அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நானே அந்த பெண்ணிடம் போன் செய்து பேசினேன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று அவர் சொன்னதுடன் அவர் அமரும் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளை எல்லாம் சொன்னால் அது இன்னும் சர்ச்சையாக மாறிவிடும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவரே போன் செய்து, ஸாரி சார்.. நான் தெரியாமல் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். நான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று கூறினார். ஆனால் இன்று வரவில்லை. கேட்டதற்கு அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறி விட்டார்கள். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகைகளே தேவையில்லை. அவர் அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். உள்ளே வர வேண்டாம். அதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. இப்படி தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள். இந்த படத்திற்கு தொடர்பே இல்லாத கோமல் சர்மா, நமீதா ஆகியோரே முன்வந்து கலந்து கொண்டிருக்கும்போது படத்தில் நடித்த நடிகைக்கு இதில் கலந்து கொள்வதில் என்ன சிரமம் ?என்னைப் பொருத்தவரை ஒரு படம் பிடித்தது என்றால் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என மனசுக்குள் தோன்றும். கதையுடன் கூடிய கருத்தும் இருக்க வேண்டும். சமீபத்தில் கூட இயக்குநர் மீரா கதிரவனின் ஒரு படம் பார்த்தேன். இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நாற்கரப்போரில் பேசப்பட்டிருக்கக் கூடிய அரசியல் எனக்கு பிடித்திருக்கிறது. என்னுடைய மிக மிக அவசரம் படத்தில் யாரும் தொடாத ஒரு விஷயத்தை சொன்னது போல இதிலும் இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இயக்குனர் தொட்டிருக்கிறார்.நான் எப்போதுமே பத்திரிக்கையாளர்களுடன் நெருங்கி அண்ணன் தம்பியாக பழகக் கூடியவன். ஆனால் சமீப காலமாக ஒரு வார இதழில் என்னுடைய வணங்கான் படத்தை பற்றி தொடர்ந்து தவறான விஷயங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. எனக்கும் பாலாவிற்கும் பிரச்சனை, அதுவும் பணத்தினால் என்று சொல்கிறார்கள். அவர்களே இப்போது இந்த விழாவிற்கு நான் கிளம்பும் முன் ஒரு பேட்டிக்காக என்னிடம் வந்தார்கள்.. எழுதி வைத்துக்கொண்ட அமெச்சூர்தனமான கேள்விகளை கேட்டார்கள். இறுதியில் பாலாவை வைத்து படம் எடுத்து அனைவருமே தெருவுக்கு வந்து விட்டார்கள்.. நீங்கள் எப்போது தெருவுக்கு வரப் போகிறீர்கள் என நேரடியாக கேட்டார்கள். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் நேரத்தில் கூட அந்த கேள்விதான் என் மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே அது எங்களை காயப்படுத்துகிறது” என்று கூறினார்.