இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கம்: “நான் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன் என்ற செய்தி தவறானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. என் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மற்ற விஷயங்கள் அனைத்தும் சட்டப்படி எதிர்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை அண்மையில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இதன் அடிப்படையில் மலையாள நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாலியல் புகார் ஒன்றில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியும் சிக்கியுள்ளார்.
எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார். அவரது புகாரை பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், அதனை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊன்னுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மலையாள நடிகர்கள் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.