நடிகர் விஜய் உச்சத்தில் இருந்த போது 2002 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான படம் தமிழன். பிரியங்கா சோப்ரா தமிழில் நாயகியாக அறிமுகமான இந்த படத்தை சுஜாதா பிலிம்ஸ் சார்பில் ஜி.வெங்கடேஷ்வரன் தயாரித்தார். காட்சிகளால் பெரிதும் சிலாகித்து பாராட்டப்பட்ட தமிழன் படத்தில் கதை என்று எதுவும் இல்லாததால் வணிக ரீதியாக தோல்வியை தழுவிய இந்தப் படத்தை மஜீத் இயக்கி தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் கி.மு, துணிச்சல், பைசா, டார்ச் லைட் என நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. இதில் எந்தவொரு படமும் ஒரு வாரம் குறைந்தபட்ச பார்வையாளர்களுடன் திரையரங்கில் ஓடியது இல்லை. முதலுக்கே மோசம் செய்த படங்களாகவே இருந்தன. இந்த நிலையில் தொடர் தோல்வி படங்களில் இருந்து மீண்டு வர போராடி வரும் நடிகர் விமல் நடிக்கும் படத்தை மஜீத் இயக்கி தயாரித்துள்ளார். நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக உருவாகியுள்ள புதிய படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.