பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்ததே சாதனைதான் – வந்திய தேவன் கார்த்தி கலகல
சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்நடிகர் கார்த்தி பேசும்போது, “நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படம் சாதாரண படமல்ல 70 வருட கனவு. வரலாற்று புனை கதை என்றால் என்ன? இரண்டு உண்மை சம்பவங்களுக்கு இடையில் இருப்பதை புனையப்பட்டு எழுதுவதுதான் வரலாற்று புனை கதை.உதாரணமாக, மிகப் பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். இது உண்மை. ஆனால், அதை எப்படி கட்டினார் என்பதை அதில் பொறித்து வைத்திருக்கிறார். ஆனால், நாம் கற்பனையாக கூறும்போது, அடிமைகளை வைத்துக் கட்டினார்கள், ஏலியன்களை வைத்துக் கட்டினார்கள் என்று நம் கற்பனைக்குத் தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படித்தான் கல்கியும் இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன்.இப்படம் வீரம், துரோகம், அன்பு, ஆன்மீகம், அரசியல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தந்த கதாபாத்திரங்களுடன் வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அது உயர் மின்னழுத்த கம்பி போன்றது. தொட்டால் ஷாக் அடிக்கும். பயந்து பயந்துதான் தொட வேண்டும். ஆனால், அதைத் தொடுவதற்கான ஆற்றலும், தைரியமும் தமிழ் பற்று வரும் போது, சினிமா மீது காதல் வரும்போதும் வருகிறது.1980-களில் உள்ள கமல் சாரின் பேட்டி ஒன்று இப்போது கிடைத்தது. எண்பதுகளில் நான் இந்த படத்தை தயாரிக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியிருந்தார். நீங்கள் மிச்சம் வைத்ததற்கு நன்றி சார். இந்த படத்தையும் நீங்களே செய்திருந்தால் நாங்கள் என்ன செய்வது?40 வருடங்களில் பல முறை மணி சார் முயற்சி எடுத்தும் இப்படம் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. ஆனால், இப்போது அனைத்தையும் வரிசைப்படுத்தியதால் நாங்களும் மலேசியா சென்றோம்.இந்தப் படத்தை எடுத்து முடித்ததே ஒரு விஸ்வரூப வெற்றி. அதற்கே முதலில் மணி சாரை பாராட்ட வேண்டும். இந்த மூன்று தலைமுறை கதைகளை கூறுவதற்கும் அவ்வளவு பொறுமை தேவைப்படும். அத்தனை கலைஞர்கள் தேவைப்படுவார்கள். மணி சார் 5 hertz வேகத்தில் பணியாற்றுகிறார். அவர் பணியாற்றுவதை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது. அவர்கூட இருந்தாலே போதும் என்று தோன்றுகிறது.தோட்டாதரணி மாதிரி அனுபவம் வாய்ந்த, விஷயமறிந்த ஆட்கள் கிடைப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த தலைமுறையில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறோம். அதைவிட இந்தப் படத்தில், இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது மிகப் பெருமையாக இருக்கிறது.என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி அவர் ஒவ்வொன்றாக விவரித்தவிதம் ரொம்ப அழகாக இருந்தது. வந்திய தேவன் ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவான், அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், ஒவ்வொரு காட்சிகளையும் தெளிவாக குறித்து வைத்திருப்பார்.நான் என்னதான் புத்தகத்தை பல முறை படித்தாலும் அங்கு போய் நிற்கும்போது மணி சார் அதை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்றுதான் பார்க்க தோன்றும். மேக்கப் கலைஞர்கள் இப்படத்திற்காக பிரத்யேகமாகவும் திறமையாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.சரத்குமார் சாரை அடையாளமே தெரியவில்லை. அவர் கதாபாத்திரத்திற்கு அவர் குண்டாக வேண்டும் தொப்பை வயிறு வேண்டும் என்பதற்காக தினமும் அதிக அளவில் உணவு உண்டு எடையைக் கூட்டினார்.இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி எதிர்காலத்தைப் பற்றி பேசக் கூடிய சிறந்த நண்பனாக எனக்குக் கிடைத்திருக்கிறார். தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த இப்படம் இன்று சாத்தியமாக முக்கிய காரணமாக இருந்தது லைகா சுபாஸ்கரன் சார்தான். மேலும், பெண்களைப் பற்றி சொல்லியாக வேண்டும். இப்படத்தில் நடித்த அனைத்து பெண்களும் கடின உழைப்பாளிகள். என்னுடைய ஜீனியூஸ் மனிதரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இங்குதான் நான் நேரில் பார்த்தேன். பள்ளிக்கூடத்தில் வீட்டுப் பாடம் செய்வது போல ஆளுக்கு ஒரு நோட்டை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். நான் உதவி இயக்குநராக இருந்தபோது திரிஷாவிற்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்தேன். இந்தப் படத்தில் அவருடன் முதல் முதலில் பணியாற்றுவதில் சந்தோஷமாக இருக்கிறது. ஷோபிதா உடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த மேடைகளில் நிறைய பேசுகிறேன்…” என்றார்.