மகாராஜா மகுடம் சூடுவாரா இரண்டு நாட்கள் வசூல்?

கதாநாயகன், வில்லன் என தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளவிஜய் சேதுபதி நடிப்பில் தயாரான படம் மகாராஜா. அவரது திரையுலக பயணத்தில் 50வது படமாகும். ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன், சிரஞ்சீவி என தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் கதாநாயகன் என்கிற நிலையில் இருந்து ஒரு நடிகனாக வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் தனது நடிப்பின் மூலம் அவர்களது தீவிர ரசிகர்களையும் தன்னை ரசிக்க வைத்தவர் விஜய் சேதுபதி. அவரது 50 வது படமான ‘மகாராஜா’ படத்தை  ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
‘மகாராஜா’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் 450, ஆந்திரா, தெலங்கானாவில் 380, கேரளாவில் 165, கார்நாடகாவில் 160,, வட இந்தியாவில் 60, வெளிநாடுகளில் 700 திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களுக்கு இணையாக திரையரங்குகளின் எண்ணிக்கை விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த வருட தொடக்கத்தில் இந்தியில் தயாரிக்கப்பட்ட மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியானது. அதன் பின்னர் வெளியான மகாராஜா படத்தின் வெற்றி விஜய் சேதுபதிக்கு முக்கியமான ஒன்று. பொதுவாக தமிழ் சினிமா முண்ணனி நடிகர்களின் நடிப்பில் வெளியான 50வது படம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 25வது படம் நீதியின் மறுபக்கம், 50வது படம் நூறாவது நாள், 75 வது படம் உழவன் மகன், 100 வது படம் கேப்டன் பிரபாகரன் என நான்கு படங்களும் சூப்பர் ஹிட் அடித்த படங்களாகும்.  தமிழ் சினிமாவில் இந்த சாதனை முறியடிக்க பட முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மகாராஜா படத்தை வெற்றி பெற செய்வதற்கான முயற்சியை விஜய் சேதுபதியும், படக்குழுவினரும் தீவிரமாகவே மேற்கொண்டனர். அதற்கு ஒத்துழைக்கும் வகையில் படத்தின் திரைக்கதை சாமான்ய மக்களின் உணர்களை தூண்டும் வகையில் இருந்தது மகாராஜா என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில். அதற்கேற்ப மகாராஜா படத்தை பார்த்த திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள் படம் பற்றிய தங்களது கருத்தை, விமர்சனங்களை பேட்டிகள் மூலமாக, தங்களது சமூகவலைதளங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் கவின் வெளியிட்டுள்ள
 பதிவில், “மகாராஜா படத்தின் எமோஷனல் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. விஜய் சேதுபதி அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தைப் பார்த்த பின் என் இதயம் கனமாக இருக்கிறது. ஆனாலும் இயக்குனர் நித்திலனுக்காக மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர்களான ஜெகதீஷ், சுதன் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
 இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவில்,
மகாராஜா படத்தை ரசித்தேன்.அருமையான திரைக்கதை. அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் . படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.என தெரிவித்துள்ளார்.

படத்தில் வரதராஜன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளநட்டி நட்ராஜ் கொடுத்துள்ள பேட்டியில்
 தனது கதாபாத்திரம் பற்றி, படம் பற்றியும் கூறுகின்ற போது
மகாராஜா படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என சிலர் கூறுவார்கள், சிலர் படத்தின் இயக்குநர் நித்திலன் தான் ஹீரோ என்பார்கள். ஆனால் என்னைப் பொருத்த வரையில் இந்தப் படத்தின் ஹீரோ என்றால் அது படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் தான் எனக் கூறியுள்ளார். படத்தில் எது பிரசன்டில் நடக்கிறது எது பாஸ்ட்டில் நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு எடிட் செய்து அசத்தி விட்டார். அவர் விரைவில் இயக்குநராக வருவார் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்டார், அரண்மணை – 4, கருடன் படங்களை தொடர்ந்து மிகப்பெரும் ஓபனிங்குடன் தனது வசூலை தொடங்கியுள்ளது. முதல் நாள் உலகம் முழுவதும் சுமார் 8.25 கோடிகளை மொத்தவசூல் செய்த மகாராஜா இரண்டாம் நாள் 9 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டிப்புடிக்கும் என்கின்றனர் திரையரங்க உரிமையாளார்கள். அரண்மனை – 4, கருடன் என இரண்டு படங்களும் நகரம் முதல் கிராமம் வரை வித்தியாசமின்றி கல்லா கட்டியது. அது போன்று மகாராஜா படம் கல்லா கட்டினால், விஜய் சேதுபதி ஆசைப்படும் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை கடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்கின்றனர் தியேட்டர் மேலாளர்கள்.