மண்சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடாது- நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அந்தப்படம் வெற்றியடைய ரசிகர்கள்” மண்சோறு சாப்பிடுவது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, என பல்வேறு வகையில் ஆன்மீக நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். இது இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் எதிரானது, முட்டாள்தனமானது என்று எந்தவொரு நடிகரும் தங்கள் ரசிகர்களை எச்சரித்தது இல்லை. அவ்வாறு செய்யாதீர்கள் என கூறியதும் இல்லை. நடிகர் சூரி அதனை செய்து இந்திய நடிகர்களுக்கு முன் உதாரணமாகியிருக்கிறார்.

தமிழ் திரைபடங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்துள்ளார் சூரி. இந்த படத்தை ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சூன் 10 ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ‘மாமன்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாற வேண்டும் என சூரியின் ரசிகர்கள், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்துள்ளனர். மேலும் அப்போது சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக சூரியின் ரசிகர்கள் பேசுகையில்,
 “மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுதலை அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனிடம் வேண்டியுள்ளோம். படம் வெற்றி பெற வேண்டும் என மண்சோறு சாப்பிட்டு உள்ளோம்.
மண்ணின் மைந்தன் அண்ணன் சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்துள்ளோம். படம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும்போது படம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்த படத்திற்கு மட்டும் இல்லை, இனி அண்ணன் சூரி நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் நாங்கள் இது போல செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்கள்.

‘மாமன்’ திரைப்படம் வெற்றி அடைய வேண்டி, மண்சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து  பேட்டியளித்த நடிகர் சூரி

 ” ‘மாமன்’ படம் வெற்றி அடைய மதுரையில் மண்சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். அதை விட்டு விட்டு மண்சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்”
என்று கூறியுள்ளார்.