மதகஜராஜா – திரைப்பட விமர்சனம்

ஒரு சாமானியன், சர்வசக்தி வாய்ந்த பெரும் தொழிலதிபரை வீழ்த்துகிறார் என்கிற ஒற்றைவரி அரதப்பழசான கதைக்கு திரைக்கதை எழுதி சிரிப்பு,கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் சுந்தர்ஜியின் அக்மார்க் படம் மதகஜராஜா.

விஷால் இளமையாக இருந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய படம்.12 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது.

இதனால் படத்தின் நாயகன் விஷால்,நாயகிகள் வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட அனைவருமே இளமையாக இருக்கிறார்கள்.

நண்பர்களுக்குச் சிக்கல் என்றதும் களத்தில் இறங்கிப் போராடும் கதாபாத்திரம் விஷாலுக்கு.அதில் ஈடுபாட்டுடன் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.எம்.ஜி.ஆர் எனும் பெயர், இரண்டு நாயகிகளுடன் உற்சாகம்,அதிரடியான சண்டைக் காட்சிகள் ஆகியனவற்றை இப்போது பார்க்கும்போது அவரே புத்துணர்ச்சி பெறுவார் என்பது உறுதி.

வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோருக்கிடையே யார் அதிகமாகக் கவர்ச்சி காட்டுவது? என்கிற போட்டியே ஏற்பட்டிருக்கும் போல.அதன் விளைவு படத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.

இப்போது நாயகனாகிவிட்ட சந்தானம், இந்தப்படத்தில் தன் நகைச்சுவை நடிப்பால் நன்றாகச் சிரிக்க வைக்கிறார்.

மறைந்த மணிவண்ணன்,மனோபாலா,மயில்சாமி,சிட்டிபாபு,சீனுமோகன் ஆகியோரை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் ஒரு சேரக் கொடுக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் சோனுசூட்,சிறப்புத் தோற்றத்தில் வரும் ஆர்யா,விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் சடகோபன் ரமேஷ்,நிதின்சத்யா ஆகியோர் அளவாக நடித்திருக்கிறார்கள்.

இப்போது கதாநாயகனாக வலம்வரும் விஜய் ஆண்டனி இந்தப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.பாடல்கள் துள்ளல் ரகம்.பின்னணி இசையும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக அமைந்திருக்கின்றன.

படம் தொய்வின்றி நகர படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் பாடுபட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.பெயருக்கு ஒரு கதையை வைத்துக் கொண்டு, பாடல்கள்,சண்டைகள், கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்கள் ஆகிய வெகுமக்கள் விரும்பும் விசயங்களைக் கலந்து ஒரு வணிக வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் செயல்பட்டிருக்கிறார்.அந்த முனைப்பு கொஞ்சம் கூடுதலாகி அங்கங்கே முகம் சுளிக்கவும் வைக்கிறார்.