மது ஒழிப்புக்கு எதிரான திரைப்படமா குயிலி ?

அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘குயிலி’. ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைத்துள்ளார்.
பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சூன் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் ப.முருகசாமி பேசியதாவது, 

“இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன்.

மதுவுக்கு எதிரான ஒரு தாயின் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. தந்தையையும் தனது கணவனையும் குடிகாரனாகக் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகிறது? அந்தப் பெண் தனது மகனை என்னவாக உருவாக்குகிறார். மதுவால் தன்னை போல பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் ஒரு முடிவு எடுக்கிறார், அது என்ன? என்பதுதான் கதை. கோவை அருகே நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். லிசி ஆண்டனி சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார். யதார்த்தமான படமாகவும் பார்வையாளர்கள் கதையோடு தொடர்பு கொள்வது போலவும் இருக்கும் என்றார்.