சென்னையில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில் விஷ ஊசி போடப்பட்டு உடலெல்லாம் கருத்துப் போய் சாகடிக்கப்பட்டு குப்பை தொட்டியில் பிணம் கிடக்கிறது.
கொலையாளி யார்… அந்தக் கொலைகள் நிகழ காரணம் என்ன என்று விஜய் ஆண்டனி கண்டு பிடிப்பதுதான் கதை.
இதுவரை நடித்த படங்களிலேயே விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் இது என கூறலாம். துருவ் என்ற அந்தப் பாத்திரத்தில் அஜய் தீஷனை துருவித் துருவி விசாரிக்கும் கட்டங்கள் பரபரப்பாக இருக்கின்றன.
தானே ஒரு ஹீரோவாக இருக்க, அறிமுக நாயகனான அஜய் தீஷனுக்கு திரையில் அதிகபட்ச இடத்தைக் கொடுத்திருப்பது தன் மீதான நம்பிக்கை, பெருந்தன்மை.
கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் தன் அறிமுகப் படத்திலேயே நடிப்பிலும், உடல் மொழியிலும் தேர்ந்த நடிகனாக ஆச்சரியப் படுத்தியிருக்கிறார் அஜய் தீஷன்.இவர்தான் கொலையாளி என்ற சந்தேகத்தைத் தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் அவர், பிளாஷ் பேக்கில் நம்மைக் கலங்க வைக்கிறார்.
இயல்பாகவே நல்ல நடிக்க நடிகையான பிரிகிடா, இதுவரை ஏற்காத போலீஸ் வேடத்தில் மிடுக்காக நடித்திருக்கிறார்.
அஜய்யை துரத்திக் காதலித்துக் கைவிடும் தீப்ஷிகாவும் ரசிக்கவும், வெறுக்கவும் வைக்கிறார்.
சற்றே மாநிறமான தீபிகா படுகோனே சாயலில் வெண்ணிலா என்ற பாத்திரத்தில் வரும் கனிமொழியின் விழிகளே கதை பேசுகின்றன. சற்றும் எதிர்பாராத பத்திரம் அவருடையது.
இவர்களுடன் வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம், அபிஷேக், நிஹாரிகா தத்தம் பாத்திரங்களில் பொருந்தியிருக்கிறார்கள்.
எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறது.
விஜய் ஆண்டனியின் இசை அந்தத் தரத்தை நிரந்தரமாக்கி இருக்கிறது .
விஷ்ணு, கே.பழனியுடன் இணைந்து குழுவாக இந்தப்படத்தின் கதையை உருவாக்கி, விஷ்ணுவுடன் திரைக்கதையை எழுதி இயக்கி இருக்கும் லியோ ஜான் பால் நிறைய நம்பிக்கையை இந்தப் படத்தில் ஏற்படுத்தி இருக்கிறார்.
திரைக்கதையில்ஒரு பக்கம் இயற்கையின் பேராற்றலையும், அறிவியலையும் இணைத்திருக்கும் யுக்தி புதுமையானது.
இயக்குநரேபடத்தின் எடிட்டராக இருப்பதால் தன் கற்பனையை அப்படியே திரையில் ஒவ்வொரு அங்குலத்திலும் கொண்டு வந்திருக்கிறார்.
லாஜிக் மீறல்கள் இருந்தாலும் போரடிக்காத கிரைம் த்ரில்லராக பார்வையாளனை கட்டிப்போடும் திரைப்படம் மார்க்கன்.