கதாநாயகனின் முந்தைய படமே, அவரது அடுத்த படத்தின்மீதான எதிர்பார்ப்பைத் தீர்மானிக்கும். ‘பிரின்ஸ்’ படம் தந்த சூடு, சிவகார்த்திகேயன் ரசிகர்களை அப்படியொரு இக்கட்டில் தள்ளியது.
‘மாவீரன்’ படம் எப்படி உள்ளது?
சிவகார்த்திகேயன் படம் என்ற வகையில் ‘மாஸ்’ ஆக இருக்கிறதா அல்லது ‘மண்டேலா’ இயக்குனரின் படைப்பென்ற வகையில் ‘கிளாஸ்’ ஆன திரைக்கதையைக் கொண்டிருக்கிறதா?
எங்கே மாவீரன்?
சென்னையின் நதிக்கரையோரப் பகுதியொன்றில் தாய், தங்கை உடன் வசித்து வருகிறார் சத்யா.
எந்தப் பிரச்சனையென்றாலும் போராடும் முனைப்பில் தாய் இருக்க, மகனோ எதையும் சகித்துக்கொண்டு வாழ வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் ஆட்களால், அப்பகுதியில் இருப்பவர்களுக்கு குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வீடு வழங்கப்படுகிறது.
வேறு வழியில்லாமல் சத்யாவின் குடும்பமும் அங்கு இடம்பெயர்கிறது. ஆனால், சரியாகக் கட்டப்படாத அக்கட்டடம் அம்மக்களை வேதனைகளுக்கு ஆளாக்குகிறது.
தான் பார்ப்பவற்றைக் கதைகளாக்கும் சத்யா, அந்த ‘மக்கள் மாளிகை’யில் உள்ள நிலைமையை ஒரு வீரன் தட்டிக் கேட்பதாகச் சித்திரக் கதையொன்றை வடிக்கிறார்.
அது ஒரு தினசரியில் வெளியாகிறது. ஆனால், உண்மையிலேயே தன் தங்கையிடம் அத்துமீற முயன்ற ஒருவனை சத்யாவால் கண்டிக்க முடியவில்லை.
அதனைக் கண்டு எரிச்சலுறும் அந்தத் தாய். மகனைப் பற்றிய தனது பொருமல்களைக் கொட்டுகிறார்.
அதனைக் கேட்கும் சத்யா, விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். தாய், தங்கை நினைப்பு வர, அதிலிருந்து பின்வாங்குகிறார். ஆனாலும், மாடியில் இருந்து தவறிக் கீழே விழுகிறார்; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறார்.
அப்போது முதல் சத்யா தன்னைத் தனது கதையின் நாயகனாகவே உணர்கிறார். அவரது காதில் ஒலிக்கும் குரலொன்று அதையே வலியுறுத்துகிறது. அதிலிருந்து விலகி ஓட நினைத்தாலும், அவரால் அதனைச் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், அந்தக் குடியிருப்புக்கு அமைச்சர் ஜெயக்கொடி வருகை தருகிறார். அந்தக் கட்டடத்தைத் தரக்குறைவாகக் கட்டக் காரணமும் அவர்தான்.
அப்போது, சத்யா செய்யும் எதிர்பாராத செயலால் அமைச்சர் அவமானப்படுகிறார். அந்தக் குரலே, அந்த இடத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் தீர்மானிப்பதாக இருக்கிறது.
ஆனாலும், நடந்த அவமானத்தைப் பொறுக்கமாட்டாமல் சத்யாவைக் கொலை செய்ய அமைச்சரின் அடியாட்கள் தயாராகின்றனர்.
அதன்பின் என்னவானது? அடிதடி என்றாலே கால்களைப் பின்னுக்கு இழுக்கும் சத்யா, அவர்களோடு நேருக்கு நேராக மோதினாரா என்று விரிகிறது ‘மாவீரன்’ திரைக்கதை.
ஒரு கோழையின் மனதுக்குள் மாவீரன் ஒருவன் இருக்கிறான் என்பதே இக்கதையின் அடிப்படை.
அதனைச் சாதாரண கமர்ஷியல் பட காட்சியமைப்புகளுடன் சொல்லிவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். அதுவே, இப்படத்தைப் புத்துணர்வாக உணரச் செய்கிறது.
காதில் கேட்கும் குரல்!
கோழையாக வாழும் மனிதனொருவன், தான் எழுதிய கதையின் தாக்கத்தினாலே மாவீரன் ஆக மாறுகிறான் என்பதே இப்படத்தின் அடிப்படைக் கதை.
பல்லாண்டுகளாக வாழ்ந்த மக்களை ஒரே நாளில் நகரின் வேறொரு பகுதிக்கு அனுப்புதல், புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பில் நிகழ்ந்த முறைகேடுகள், தங்களது பிரச்சனையை அரசியல்வாதிகள் அணுகும் விதம் என்பது போன்ற அம்சங்கள் இந்த கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்கு யதார்த்த முலாம் பூசுகின்றன.
அவற்றோடு நாயகன் பெறும் ஆற்றலை பேண்டஸியாகவும் காமெடியாகவும் சொன்ன விதத்தில் கவனிக்க வைத்திருக்கிறார் மடோன் அஸ்வின்.
அவருடன் பணியாற்றிய குழுவினர், திரையின் ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றுவதில் தீவிரமாக உழைத்திருக்கின்றனர்.
விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு, ஒரு பிரேமில் விஎஃப்எக்ஸுக்கு எத்தனை சதவிகிதம் இடம் ஒதுக்க வேண்டுமென்பதில் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறது.
அதனாலேயே, திரையில் யதார்த்தமும் பேண்டஸியும் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பது நமக்கு முரணாகத் தென்படுவதில்லை.
வெவ்வேறு உயரங்களுக்குத் தாவும் காட்சிகளின் சாராம்சத்தை ஒரே தளத்தில் சீராக அடுக்க முயற்சித்திருக்கிறது பிலோமின் ராஜ் படத்தொகுப்பு. பின்பாதியில் இருக்கும் இழுவையைக் கொஞ்சம் குறைக்கலாம்.
குமார் கங்கப்பன், அருண் வெஞ்சாரமூடுவின் கலை வடிவமைப்பு ஒரு பிரேமில் பல அடுக்குகளை நிறுவ முயன்றுள்ளது.
பரத்சங்கரின் இசையில் பாடல்களை விட, பின்னணி இசை உருவாக்கும் தாக்கம் மிகப்பெரியது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகளில் அவரது இசை தரும் விறுவிறுப்பும் வேகமும் அளப்பரியது.
சிவகார்த்திகேயனுக்கு இதில் ரொம்பவே வித்தியாசமான பாத்திரம்.
எப்போதும் திரையில் கலகலப்பாக வரும் ஒருவரை ரொம்பவே பயந்தவராகக் காட்டியிருக்கிறது இப்படம்.
அதிதி ஷங்கரை அழகியாகவும், அளவாக நடிக்கத் தெரிந்தவராகவும் காட்டியிருக்கிறது ‘மாவீரன்’.
மிஷ்கின் பாத்திரம் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல என்றாலும், அவரது இருப்பு திரைக்கதையைப் புதிதாக உணரச் செய்கிறது. போலவே, அவரது நண்பராக வரும் சுனில் பாத்திரம் அளவோடு திரையில் வெளிப்படுகிறது.
வெகுநாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் சரிதா நடித்திருப்பது நிச்சயம் சிலாகிக்கப்பட வேண்டிய விஷயம். அவர் வரும் காட்சிகளும் அதனை ஆமோதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் யோகிபாபு வரும் காட்சிகள் அப்ளாஸை அள்ளுகின்றன. வெகுநாட்களுக்குப் பிறகு யோகிபாபுவின் ஒன்லைனர்கள் சிரிக்கும்படியாக உள்ளன.
இவர்கள் தவிர்த்து ‘வத்திக்குச்சி’ திலீபன், ‘குக் வித் கோமாளி’ மோனிஷா, செம்மலர், மதன் தட்சணாமூர்த்தி, பழனி முருகன் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் காதில் கேட்கும் குரல் ஆகத் திரையில் ஒலிக்கிறார் விஜய் சேதுபதி. அவரது குரல் இரவலே, முகம் தெரியா பாத்திரத்துக்குப் பலத்த கைத்தட்டல்களை அள்ளித் தருகிறது.
வீரமே ஜெயம்!
ஒரு கமர்ஷியலான பேண்டஸி கதையில் யதார்த்தத்தை நிரப்புவதென்பது பெரிய சவால். ஆனால், ‘மண்டேலா’ தந்த அனுபவத்தில் அதனை லாவகமாகச் சமாளித்திருக்கிறார் மடோன் அஷ்வின்.
படம் முழுக்கச் சின்னச் சின்ன வசனங்களால், பாவனைகளால் நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்.
யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகளையும் தாண்டி மிஷ்கின், சுனிலைத் தேடி வந்து சிவகார்த்திகேயன் சமரசம் பேச வரும் இடமும் அதற்கொரு உதாரணம்.
ஆனாலும், பின்பாதியில் சிவகார்த்திகேயன் தனது பயத்தை வெளிப்படுத்தும் இடங்கள் சலிப்பூட்டுகின்றன; திரும்பத் திரும்ப ஒரே காட்சியைப் பார்க்கும் உணர்வை உருவாக்குகிறது; அதனைச் சரிப்படுத்தியிருக்கலாம்.
வழக்கமாக, சிவகார்த்திகேயன் படங்களில் பாடல்கள் துள்ளல் ரகமாக இருக்கும்.
இதில் அந்த மாயாஜாலம் கொஞ்சம் குறைவுதான்.
அதேநேரத்தில், ஒரு நேர்த்தியான பேண்டஸி எண்டர்டெயினர் பார்த்த திருப்தியை இப்படம் நிச்சயம் தரும்.
Sign in