எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சட்டம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கான நியாயம் உடனடியாக கிடைக்கிறதா? என்ற பல கேள்விகளோடு உருவாகியிருக்கும் இப்படம் பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வழியையும் சொல்லியிருக்கிறது என்கிறார் இயக்குநர் வேலன்
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக ‘மெய்ப்பட செய்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம், “’மெய்ப்பட செய்’ உண்மையை செய் என்று அர்த்தம். சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகத்தான் இந்த படம் இருக்கும்.பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட ரீதியாக சரியான நியாயம் கிடைக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் சரியான தண்டனை கிடைப்பதில்லை. அதனால் தான் இதுபோன்ற குற்றங்கள் தொடர் கதையாகி வருகிறது. ‘மெய்ப்பட செய்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் சொல்லப்படவில்லை. இந்த படம் வெளியானால் நிச்சயம் பாலியல் குற்றங்கள் குறையும். பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு அந்த தண்டனை எப்படி இருக்க வேண்டும், என்பதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.இது நான் தயாரித்த முதல் படம், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என அனைவருக்கும் முதல் படம். இருந்தாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்துள்ளோம். அதே சமயம், பாடல்கள், நகைச்சுவை, காதல் காட்சிகள் என கமர்ஷியலாகவும் படம் இருக்கும். பாலியல் குற்றங்களை மையப்படுத்திய கதை என்பதால் முகம் சுழிக்கும்படியான எந்தவித காட்சிகளும் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்க கூடிய நல்ல மெசஜ் சொல்லும் படமாக இருக்கும்.இந்த படத்தை தயாரித்து முடித்து வெளியீட்டு பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால், புதுமுகங்கள் என்று பல இடங்களில் புறக்கணிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இப்போது பெரிய நடிகர்களாக இருப்பவர்களும் ஒரு காலத்தில் ஒரு படத்தில் புதுமுகங்களாக நடித்தவர்கள் தானே. எனவே, படத்தின் கதை மற்றும் மேக்கிங்கை பாருங்கள், நடிகர்களை பார்க்காதீர்கள் என்று நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். இன்று ஒடிடி-க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூட இப்போது பெரிய நடிகர்கள் நடித்த படங்களை மட்டும் தான் வாங்குகிறார்கள். இதனால் சினிமாவுக்கு புதிய தயாரிப்பாளர்கள் வருவது பாதிக்கப்படும்.எங்கள் படத்தை என் நண்பர்கள் அபிலாஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் வெளியிடுகிறார்கள். தமிழகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும்.” என்றார்.