மேஜர் முகுந்த் வரதராஜனின் அடையாளம் மறைக்கப்படவில்லை அமரன்’ இயக்குநர் விளக்கம்
‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நவம்பர்4 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது:
இந்த படத்தில் எது நிஜம், எது சித்தரிப்பு, எது உங்கள் கற்பனை என்றெல்லாம் நிறைய பேர் கேட்கின்றனர். பயோகிராபி என்பது ஒரு ஜானர். ‘டைட்டானிக்’, ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ இதெல்லாம் அந்த வகைப் படங்கள்தான். அவற்றுக்கென்று சில நியாய தர்மங்கள் இருக்கிறது. அவற்றை கடைபிடித்து எழுதப்பட்ட ஒரு திரைக்கதை இது. அது இன்று மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு தமிழர் அடையாளம் இந்த படத்துக்கு இருக்க வேண்டும் என்பது இந்து ரெபக்கா வர்கீஸ் வைத்த கோரிக்கை. அதே போல முகுந்த் ‘நைனா’ நைனா’ என்று அழைக்கும் அந்த தந்தை வரதராஜனும், ‘ஸ்வீட்டி’ என்று அழைக்கும் தாய் கீதாவும் வைத்த கோரிக்கை, முகுந்த் எப்போதும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுவார். தன்னுடைய சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்கக் கூடாது என்று நினைப்பார். எனவே ஒரு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ராணுவ வீரனாக இந்த படத்தில் அவருக்கு கொடுங்கள் என்று அந்த குடும்பத்தார் எங்கள் முதல் சந்திப்பிலேயே கேட்டுக் கொண்டனர்.