ஆறுமுககுமார் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஏஸ்’. மே 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசும் போது, தன்னுடன் நடித்த ஒவ்வொரு நடிகரையும் குறிப்பிட்டு பணிபுரிந்த அனுபவத்தை குறிப்பிட்டார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு குறித்து பேசிய அவர்,
“யோகிபாபு தான் இப்படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்வேன். அவர் எப்போதுமே ஆச்சரியம் தான். நிறைய படங்களில் நடிக்கிறார்.
எப்படி அவருடைய மூளை எப்படி இவ்வளவு யோசிக்குது என நினைப்பேன். அவருடைய சிந்தனை என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்தும்.
சில சமயங்களில் டப்பிங்கில் டயலாக் சேர்த்துவிடுவார். நான் டப்பிங் செய்து முடித்தவுடன் அவரை அழைத்து படம் போட்டு காட்டுங்கள். அவருக்கு ஏதேனும் ஒன்று தோன்றும் என்று சொன்னேன்.
நிறைய காட்சிகளில் அவரோடு நடிக்க முடியாமல் சிரித்திருக்கிறேன். அவர் மிகவும் திறமையான நடிகர். நிறைய முறை படம் இயக்குவதற்காக கதைகள் எல்லாம் சொல்வார். அவரிடம் எதையும் யோசிக்காதீர்கள், சீக்கிரம் இயக்குங்கள் தலைவா என்பேன்.
யோகிபாபு சும்மா உட்கார்ந்திருந்து நேரம் செலவழித்து பார்த்ததே இல்லை.சமீபமாக அவரைப் பற்றி நிறைய தவறான செய்திகள் பார்க்கிறேன். அவருடன் பணிபுரிந்த வகையில் சொல்கிறேன், அவர் ரொம்ப தங்கமான மனிதர். இந்தப் படத்தின் முக்கியமான தூண்களில் ஒருவர் யோகிபாபு” என்று பேசினார் விஜய் சேதுபதி.