ராஜா கிளி- திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் மகன்களை கதாநாயகனாக்கி அப்பாக்கள் படங்களை இயக்கியிருக்கிறார்கள். அப்பா தம்பிராமைய்யாவை இளமை துள்ளலோடு, மூன்று கதாநாயகிகளுடன் ஜோடியாக நடிக்க வைத்து மகன் உமாபதி ராமைய்யா இயக்கியிருக்கும் படம் ராஜா கிளி

பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் திறந்து பார்த்தால்அசிங்கங்களும், அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் இருக்கும்.அப்படி ஒரு செல்வந்தரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ராஜாகிளி.

முருகப்பன் என்கிற தொழிலதிபருக்கு மனைவி துணைவி தவிர மற்றொரு இளம் காதலியும் இருக்கிறார்கள்.அதனாலேயே அவர் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடி, சிக்கல்களை சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறதுஇந்தப்படம்.

பெரும் செல்வந்தர், மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரர் ஆகிய இருவித கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் தம்பிராமையா.செல்வந்தர் வேடத்தில் அவருடைய ஆட்டம் பாட்டம் எல்லாம் உற்சாகத் துள்ளலாக அமைந்திருக்கிறது.தற்காலக் கதாநாயகர்களே பொறாமைப்படும் வண்ணம் தோழிகளோடு கும்மாளம் போடுகிறார்.மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும்போது சிறந்தநடிப்பை வெளிப்படுத்தி கலங்க வைக்கிறார்.

தம்பிராமையாவின் முதல் மனைவியாக தீபா,இரண்டாம் மனைவியாக சுபா இளம்காதலியாக சுவேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களில் தீபா கதாபாத்திரம் உளவியல் ரீதியாக அணுகப்பட்டிருக்கிறது.அவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் செயல்பாடுகள் நெகிழ வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிக்குமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், கிரிஷ், கிங் காங் ஆகியோருடைய கதாபாத்திரங்கள் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தம்பிராமையாவே இசையமைத்திருக்கிறார்.சாய் தினேஷ் பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.

கேதார்நாத் – கோபிநாத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.பகட்டான வாழ்வு பட்டுப்போன வாழ்வு ஆகிய இரண்டையும் காட்சிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையாதான்

இயக்கியிருக்கிறார்.குடும்ப வாழ்வில் பெண்கள் பங்கு எவ்வளவு முக்கியம்? அவர்களுக்குள் நடக்கும் மாற்றங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் எப்படி மாற்றும்? என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.குடும்பத் தலைவரிடம் ஆணாதிக்க மனோபாவம் இருந்தால் அவை எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் பேசியிருக்கிறார்கள்.

குடும்பத்தோடு பார்க்க கூடிய ஆபாசமில்லாத படம்.