RP Films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.P.பாலாவே இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கிருக்கிறார்.
இந்தப் படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
2020-ம் ஆண்டு இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான மலையாள சினிமாவான `லவ்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்.
பிஸினஸ் செய்து நஷ்டமடைந்து நொடிந்து போயிருக்கும் ‘அஜய்’ என்னும் பரத்திற்கும், ‘திவ்யா’ என்ற வாணி போஜனுக்கும் திருமணம் நடக்கிறது. தனக்காக இல்லையென்றாலும் தன் அப்பாவுக்காக திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட வாணி, ‘பரத் வேண்டாம்’ என்று தன் தந்தை சொல்லியும் கேட்காமல் அவரைத் திருமணம் செய்திருக்கிறார்.
தற்போது திருமணமாகி ஒரு வருடமான நிலையில் தம்பதியரிடையே சண்டையும், சச்சரவும் மட்டுமே மிச்சமாகியிருக்கிறது. யார் சொல்லியும் கேட்காமல் வாணியின் அப்பா கொடுத்தப் பணத்தில் சலூன் கடைகளைத் துவக்கி பெரும் நஷ்டப்பட்டுவிட்டார் பரத். இதனால் தற்போது மிகுந்த குடிகாரராகவும் மாறிவிட்டார் பரத்.
தற்போது குழந்தை உண்டாகியிருக்கும் தருணத்திலும் தன்னைப் புரிந்து கொள்ளாமல் முழு நேரமும் குடிகாரராகவே இருக்கும் பரத்தைவிட்டு விலக நினைக்கிறார் வாணி.
இந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் மீண்டும் சண்டை மூண்டு கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதன் பின் விளைவு வாணியின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போடுகிறது..! அது என்ன என்பதுதான் இந்த ‘லவ்’ படத்தின் முடிவு.
இதுவொரு சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம். வித்தியாசமான திரைக்கதையில் படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தப் படத்தின் மைனஸூம்கூட.
மலையாளத்தில் இந்தப் படம் வெளியானபோது அதன் தொழில் நுட்ப நேர்த்தி பாராட்டப்பட்டாலும் கற்பனாவாத கதாப்பாத்திரங்களை வைத்து சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதையினால் படம் ரசிகர்களைக் கவராமல் போய்விட்டது. தமிழிலும் அதே நிலைமைதான்..!
பரத்துக்கும், வாணிக்கும் இடையில் நடக்கும் வாய்ச் சண்டையும், மற்போரும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தாலும், சிறுபிள்ளைத்தனமான சண்டை என்பதால் அது பார்வையாளர்களுக்கு எந்தவொரு எபெக்ட்டையும் கொடுக்கவில்லை.
பரத்தைப் பொறுத்தவரையிலும் எப்போதுமே தன் நடிப்புக்கு மீட்டர் போட்டுதான் நடிக்கிறார். இதிலும் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு, இந்தப் படத்திற்கு இது போதும் என்று நினைத்து ஒரு அளவாகவே நடித்திருக்கிறார்.
விவேக் பிரசன்னா, மற்றும் டேனியல் போப்பிடம் பேசும்போது அவருக்குள் இருந்திருக்க வேண்டிய கோபமும், எரிச்சலும் மிஸ்ஸிங். அதேபோல் கொலை செய்துவிட்ட பதட்டமும், பச்சாபதமும், மாட்டிக் கொண்ட அதிர்ச்சியும், மாமனாரை எதிர்கொள்ளும் தடுமாற்றமும்கூட அவரிடத்தில் இ்ல்லை. மிகச் சாதாரணமாகவே அனைவரையும் அவர் எதிர்கொள்கிறார்.
ஆனால் வாணி போஜன் இதற்கு நேரெதிர். பரத் மீதான கோபப் பார்வையையும், எரிச்சலையும் வெளிப்படுத்தும்விதத்தில் சரியாகவே நடித்திருக்கிறார். தாக்குதலில் சிக்குண்டு பிணமாய் கிடக்கும் காட்சியில் அவரது முகத்தில் அழகு கொட்டிக் கிடக்கிறது. அந்த சவமான நடிப்பில் நிஜ சவங்களுக்கே சவால்விட்டிருக்கிறார் வாணி போஜன். பாடல் காட்சிகளில் கொள்ளை அழகுடன், மாண்டேஜ் காட்சிகளிலும் தனது கொள்ளை சிரிப்புடன் வளைய வந்திருக்கிறார் வாணி.
மனைவியுடனான சண்டை, குடும்பத்தில் குழப்பம் விளைவித்திருக்கும் நண்பன் மீதான கோபம், எரிச்சல் இவற்றுடன் மது என்னும் அரக்கனும் சேர்ந்து கொள்ள ஒரு குடிகாரன் என்ன பேசுவானோ, அதைக் கச்சிதமாகப் பேசி, உண்மையான கதாப்பாத்திரம் போலவே செய்திருக்கிறார் விவேக் பிரசன்னா.
டேனியல் போப் சிச்சுவேஷனை புரிந்து கொள்ளாமலேயே பெண்ணை அழைத்து வரும் தரங்கெட்ட மனிதனாகவே நடித்திருக்கிறார். தன் மனைவியுடன் டென்ஷனில் போனில் பேசும் காட்சியில் கதையையும் கொஞ்சம் சொல்லியிருப்பதால் அது உயிர்ப்புடன் நமக்குத் தெரிகிறது.
ஒரேயொரு காட்சி என்றாலும் பரத்தின் கன்னத்தில் ஒரேயொரு அடியைக் கொடுத்து நம் மனதில் இடம் பிடிக்கிறார் ராதாரவி. தன் தன்மானத்திற்கு இழுக்கு என்றவுடன் எழுந்தோடும் ஸ்வயம் ஷித்தாவும் கவனிக்க வைத்திருக்கிறார்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவுதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். ஒரு சின்ன அபார்ட்மெண்ட் வீடுதான் மொத்தப் படமுமே என்பதால் அந்த சின்ன வீட்டுக்குள் போரடிக்காத வகையில் கேமிரா கோணங்களை மாற்றி, மாற்றி வைத்து நம்மைக் கவர்ந்திழுக்கிறார் பி.ஜி.முத்தையா.
பாடல்களைவிடவும், பின்னணி இசையில் படத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். படத் தொகுப்பாளர் அந்தக் கடைசி சில நிமிடங்களை மிகக் கவனமாக எடிட் செய்திருப்பதால் எது கற்பனை, எது நிஜம் என்பது எளிதாக நமக்குப் புரிகிறது.
படத்தில் இருக்கும் பிரச்சனையே, இதுவொரு ஒட்டு மொத்த படமாக பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையை கொடுக்கவில்லை என்பதுதான்.
கனவுலக கதாப்பாத்திர நடிகர், நடிகைகள் சிறப்புடன் நடித்திருந்தாலும் அது தந்த மன அழுத்தத்தின் பாரம் தாங்காமல் ரசிகன் துவண்டிருப்பது இன்னொரு புறம். இந்தப் பாரத்தை “ச்சும்மா.. இதெல்லாம் வெறும் கற்பனை… ஒண்ணுமே இல்லை.. இறக்கி வைச்சிருங்க..” என்று வெறும் வசனத்தாலேயே இயக்குநர் தாண்டி செல்வதுதான் ரசிகர்களின் கோபத்திற்குக் காரணம்.
பரத்தின் பிரச்சினைக்கு Schizophrenia, Hallucinations என்று வாயில் நுழையாத நோய்களை சொன்னாலும், அவரிடத்தில் இருக்கும் அதீத குடிப் பழக்கம்தான் இது எல்லாவற்றுக்குமான அடிப்படை காரணம் என்று இயக்குநர் எந்த இடத்திலும் சொல்லவில்லை என்பது மன்னிக்க முடியாத குற்றம்.
கடைசியாக இந்தப் படம் குடும்ப வன்முறை பற்றிய படமா, அல்லது கள்ளக் காதல் பற்றிய படமா.. அல்லது ஒரு மன நோயாளியின் செயல்பாடுகள் பற்றிய படமா.. என்று எதையும் தீர்க்கமாகச் சொல்லாமல் முடிந்திருப்பது வருத்தத்திற்குரியதுதான்.
பரத் மன நோய்க்கு ஆளானதற்குக் காரணம் அவருடைய அதீதமான குடிப் பழக்கம் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டு, கடைசியில் மொத்தப் பழியையும் நாயகி மீது தூக்கிப் போட்டுவிட்டு அவளது வாழ்க்கையை சீரழித்தது எந்த வகையில் நியாயம் இயக்குநரே..!?
இந்தப் படத்தின் இறுதியில் நாயகி சொலையாளியாக நிற்பதுதான் இயக்குநர் சொல்ல வந்த நீதியா..? அதுதான் உண்மையென்றால் இது நிச்சயமாக எடுத்திருக்கக் கூடாத, தவறான கருத்துரையுடன் கூடிய படம் என்றே சொல்லலாம்..!
காதலே இல்லாத காதல் திரைப்படம்..