லெவன் – திரைப்பட விமர்சனம்

தொடர்கொலைகளை விசாரிக்கும் ஒரு காவலதிகாரி விபத்தில் சிக்கியதும் நாயகன் நவீன் சந்திரா அந்த வழக்கை விசாரிக்க வருகிறார்.அவருடைய விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்ன விடை கிடைக்கிறது? என்பதைச் சொல்வதுதான் லெவன் திரைப்படம்.

நாயகனாக நடித்திருக்கிறார் நவீன் சந்திரா.காவல்துறை அதிகாரிக்குரிய அத்தனை அம்சங்களும் அவருக்குப் பொருந்தியிருக்கின்றன.விசாரணையின்போது எழுத்தில் இருக்கும் புத்திசாலித்தனத்தை நடிப்பிலும் கொண்டு வந்திருக்கிறார்.
பள்ளித் தலைமை ஆசிரியையாக நடித்திருக்கிறார் விருமாண்டி அபிராமி.அவருடைய அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

 உதவி காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் திலீபனும் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.

ரித்விகா, ரியா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜை ஆகிய நடிகையர், நடிகர்களும் ஏற்றிருக்கும் வேடத்துக்குத் தக்க நடித்திருக்கிறார்கள்.

இமான் இசை கிராமத்துக்கதைகளில் மட்டுமல்ல திகில் படத்திலும் என்னால் சிறப்பாகச் செய்யமுடியும் என்று காட்டியிருக்கிறது.பின்னணி இசையில் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் உழைப்பில் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி, எவ்விடத்திலும் ரகசியம் உடைந்துவிடாமல் கடைசிவரை படத்தைக் கொண்டு செல்லமுயற்சி செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் அஜில்ஸ்.வழக்கமான கதை என்றாலும் நடிகர்கள் தேர்வு மற்றும் கொலைக்கான காரணம் ஆகியனவற்றில் படத்தை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்.ப்ளாஷ்பேக் எனப்படும் சொல்லும் கதையில் சொல்லியுள்ள செய்திகள் நெகிழ வைப்பதாக அமைந்திருக்கின்றன.

பயமுறுத்தும் படவரிசையில்  திரைக்கதை அமைத்திருந்தாலும் அன்பை வலியுறுத்தும் கதையாக இருப்பதும் கடைசிவரை தொய்வில்லாமல் கொண்டு செல்லும் வகையிலும் அமைந்திருப்பது அவருக்குப் பலம் சேர்க்கும் அம்சங்கள்.

தன்னுடைய முதல்படத்திலேயே அனைவரையும் யார் இவர்? என கவனிக்க வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.