இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி.கே.பி. மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன் பேசுகையில்,
ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தை தொடங்குவதற்கு காரணம்.. பல புதிய இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகத்தான். இப்படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இதற்கு முன் ‘சூல்’ என்றதொரு குறும் படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வென்றது.
இது தொடர்பாக அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் கதையை விவரித்தார். இந்தக் கதையை கேட்டவுடன் தயாரிக்க ஒப்புக் கொண்டோம். ஏனெனில், இந்தக் கதையை இயல்பாக சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கியிருந்தார்.
அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக நடிகை நீலிமா இசையை தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்தப் படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தன் பாலின சேர்க்கையாளர்களை பற்றிய இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில்,
நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைபோல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான் இந்த படைப்பு” என்றார்.
இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்…” என்றார்.
தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில்,
இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புதுமுகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்… எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம்.
நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ அதற்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கங்கள் இந்த செயலியில் இருக்கிறது. ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது ‘பாணி பூரி’தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பியபோது, ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ தொடங்கியது.
இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது, என்னுடைய கணவர் இசை, “அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம்..” என்றார்.
அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஏராளமான திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது. அந்த வகையில் இந்தப் படத்திற்காக உழைத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என் அனைவரும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர். இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.”