ல் தகாசைஆ திரைப்பட விமர்சனம்

விஜய்,சூர்யா ஆகியோர் இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் இளம் தலைமுறையிடம்பிரபலமான சொல் ல்தகா சைஆ.இதை அப்படியே திருப்பிப் போட்டால் காதல் ஆசை.

இந்தப்பெயரைப் படத்துக்கு வைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான சதா நாடார்.

நாயகன் சதா நாடார்,நாயகி மோனிகா சலினா ஆகியோர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் இணையர்.திடீரென நாயகனுக்கு வரும் கனவுகள் நனவாகத் தொடங்குகின்றன.இரவில் கனவு காண்பார் அது அடுத்தநாள் அப்படியே நடக்கும்.எல்லாம் நல்லபடியாக இருந்தால் சரி,ஆனால் ஆசை மனைவியைக் கொலை செய்வது போல் கனவு வருகிறது.அதனால் அதிர்ந்து போகிறார் கணவர்.அவரைப் பார்த்து பயந்து போகிறார் மனைவி.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் படம்.

நாயகனே இயக்குநர் என்பதால் சுதந்திரமாகச் செயல்பட்டிருக்கிறார் சதா நாடார்.உடன் நடித்தவர் நிஜ மனைவியே என்பதால் அறைக்குள் நிகழ்த்த வேண்டியவற்றில் பெரும்பகுதியை திரையில் நடத்தியிருக்கிறார்.கதை திரைக்கதையை விட காட்சிகளை அதிகம் நம்பியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மோனிகா சலினா, திரைப்பட நடிகைக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறார்.கதையும் காட்சிகளும் அவருக்கு நற்பெயர் பெற்றுத்தருகிற மாதிரி அமைந்திருக்கின்றன.அதனால் நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.

ஜான்சன் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை தாழ்வில்லை.

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.மனோகுமார் தேவைக்கேற்ப பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

தான் நாயகனாக நடிக்கவேண்டும் என்பதற்காகவும் தன் மனைவியை நாயகியாக்க வேண்டுமென்பதற்காகவுமே இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து படமெடுத்திருக்கிறார்.

அவருடைய ஆசை ஈடேறிவிட்டது பார்வையாளன் டிக்கட்டுக்கு கொடுத்த காசுக்கு கம்பெனி பொறுப்பல்ல….