வசந்தபாலன் இயக்கத்தில் அரசியல் பேசும் தலைமைச் செயலகம் வலைத்தள தொடர்

இயக்குநர் ஷங்கர் உதவியாளராக இருந்து இயக்கத்தை கற்றுக் கொண்டு இயக்குநர்களாக மாற்றம் கண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் வசந்தபாலன். சமூகம் சார்ந்த, மனித உணர்வுகளை திரைப்படமாக்கி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவர் வசந்தபாலன். 

2006 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான வெயில் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. அதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு பிழைப்புக்காக சென்னை வரும் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அப்பட்டமாக தோலுரித்து காட்டியது.
வசந்தபாலன் கடந்த வருடம்அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி படத்தை இயக்கினார். அதன் பின் எந்தவொரு திரைப்படத்தையும் அவர் இயக்கவில்லை.
 தற்போது தலைமைச் செயலகம் எனும் பெயரில்வலைதள தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். நடிகைதிரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இத் தொடரின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை நேற்றுவெளியிட்டு  படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிஷோர் மட்டும் செய்தித்தாள் வாசிக்கும் படியான புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
 ‘தலைமைச் செயலகம்’ வலைத்தொடரில்  கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா சரத்குமார் ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த வலைத்தள தொடரை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகியுள்ளது.

டீசர் எப்படி?

‘நீதினா என்னன்னு தெரியுமா… செஞ்ச தப்புக்கு தண்டனை வாங்கி தர்ரதா, இல்லை, தப்பே செய்யக் கூடாதுங்குற பயத்த ஏற்படுத்துறதா…
எதுவா இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்க பக்கம் நிக்கிறதுதான் நீதி.
அந்த நீதி கிடைக்கிறதுக்காக சில குற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
அந்தக் குற்றங்களுக்குத் தண்டனைக் கூட கிடைக்கலாம். அதன் முடிவு மரணமா கூட இருக்கலாம்.
எல்லாத்தையும் தாண்டி, தன்னையும் தாண்டி ஒரு தலைவன் தன் மக்கள் மீது வைத்திருக்கிற காதல்தான் நீதி’
என்று கிஷோர் பேசும் நீண்ட வசனம் டீசரின் ஆரம்பம் தொடங்கி இறுதி வரை இடம்பெறுகிறது. இதைப் பார்க்கும் போது ஒரு அரசியல் கட்சி தலைவன், ஒரு சம்பவத்தின் நீதிக்காக குற்றங்கள் செய்து, அதனால் மரண தண்டனை வரை செல்கிறது. அது என்ன சம்பவம், என்ன குற்றம் அந்தத் தலைவன் செய்தான் என்பதை விரிவாக இந்த தொடர் சொல்வது போல் தெரிகிறது. தலைமைச் செயலகம் தொடர்வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.