வலைதள வசூல்ராஜாக்களுக்கு கடிவாளம் போடும் – தயாரிப்பாளர்கள் சங்கம்

சினிமா தொடங்கிய காலம்
முதல் இன்றளவும் திரைப்படத் துறையினருக்கும், செய்தி ஊடகங்களுக்கும் இடையில் இணக்கமான நல்லுறவும், மோதலும் சம அளவில்இருந்து வருகிறது.
எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் தனிமனித விமர்சனம், மிரட்டல் நடவடிக்கைகளில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் ஈடுபட்டதால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக நடிகர்கள்தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கே.கிருஷ்ணன் இருவரையும் காவல் துறை கொலைக் குற்றசாட்டில் கைது செய்தது வரலாறு. அதன் பின் கடந்த நூறாண்டுகளில் தமிழ் சினிமாவில் அது போன்ற சம்பவங்கள் நிகழவில்லை. ஆனால் ஆபாச செய்திகளை, தனிமனிதர்களின் அந்தரங்க தகவல்களை உண்மையும், பொய்யும் கலந்து வெளியிடும்
மஞ்சள் பத்திரிகைகள் எல்லா காலங்களிலும் இருந்து வந்திருக்கிறது.
அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இணைய ஊடகம் என முப்பரிமாண வளர்ச்சியில் செய்தி ஊடகங்கள் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து இருக்கும் நிலையில் மஞ்சள் பத்திரிகை கலாச்சாரம் யுடியூப் நடத்தும் தனி நபர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது என்கிற குற்றசாட்டு தொடர்ச்சியாக திரைப்பட துறைசார்ந்தவர்களால் கூறப்பட்டு வந்தது.
அதற்கு எதிராக தனி நபராக, அமைப்புரீதியாகசட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை
தங்களை பற்றி நாலாந்தர செய்திகள் வராமல் இருக்க திரைத்துறையினர் கரன்சிகள் மூலம் பத்திரிகையாளர்களை கவனித்த சம்பவங்கள் கடந்த காலத்தில் நிகழ்காலத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன
என கூறப்படுகிறது. அந்த பலவீனமே திரைப்படங்களை நேர்மையாக விமர்சிப்பதை கடந்து அந்த படம் சம்பந்தமான திரைக்கலைஞர்களையும், தயாரிப்பாளர்கள் குறித்தான தனிமனித தாக்குதல்கள் யுடியுப் தளங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்கின்றனர் நேர்மையான மூத்த ஊடகவியலாளர்கள்.
இதனை எப்படி சமாளிப்பது, சரி செய்து ஒழுங்குபடுத்துவது என்பதில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைக்கலைஞர்களிடைய ஒரு மித்த கருத்தும், திரைத்துறை சார்ந்த சங்கங்களுக்கிடையே ஒற்றுமை இன்மையும் இல்லாத சூழலை தங்களுக்கு சாதகமாக யுடியுப்பர்கள் பயன்படுத்தி வந்தனர் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.
இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் – 2, சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா ஆகிய படங்கள் யுடியுப்பர்களால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டன. கமல்ஹாசன், சூர்யா இருவரும் தனிப்பட்ட முறையில் நாலாந்தரமாக விமர்சிக்கப்பட்டார்கள்.
கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அவரது திரைப்பட ஆலோசகர் தனஞ்ஜெயன் இருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தனர் வலைத்தளங்களில் . இதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தார் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம். திரையரங்க வளாகத்தில் புதிய படங்கள் வெளியாகும் நாளன்று பார்வையாளர்களிடம் பேட்டி எடுக்க அனுமதிக்க கூடாது.படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் விமர்சனம் செய்யப்படுவதை தவிர்க்க சட்டரீதியான நடவடிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனையொட்டி நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. அதனையொட்டிதலைவர் பாரதிராஜா கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை நவம்பர் 18 ஆம் தேதிஅன்று வெளியிட்டது. தலைவர் பாரதிராஜா ஒப்புதல் இல்லாமல் அவரது கையெழுத்தை பயன்படுத்தி அச்சங்கத்தின் பொருளாளர் தனஞ்ஜெயன் அந்த அறிக்கையைவெளியிட்டு ஊடகங்களை மிரட்டுகிறார்.
இவர் தமிழ்சினிமாவிற்கு ஆபத்தானவர் என சிலர் யுடியுபில் பேசினார்கள். ஊடகங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்களை திசை திருப்புகிறார் என்கிற பிம்பத்தை கட்டமைக்க யுடியுபர்கள் முயற்சித்தனர். பாரதிராஜா ஒப்புதலுடன் அறிக்கை வெளியிடப்பட்டது என்று
டிசம்பர் 5 ஆம் தேதி சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்
திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப்  போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான மூன்று நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற, நீதிமன்றத்தில் நமது சங்கத்தின் கோரிக்கை, சமீப காலங்களில் சில ஊடகங்கள் தனிப்பட்ட வன்மத்துடன், சில திரைப்படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனி மனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர, ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடங்கங்களுக்கும் எதிரானது அல்ல. அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தினால் தான், ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றம் சென்று இருக்கிறோம். இதே காரணத்திற்காகத்தான், ஏற்கனவே மலையாள திரைப்பட உலகமும் நீதிமன்றம் சென்றுள்ளது.
பாரம்பரியமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர்களின் இணையதளங்களில் எப்போதும் திரைப்படங்களை, திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது இல்லை. சில ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் தவிர, மீதம் அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் திரைப்பட உலகிற்கு ஆதரவாக இருக்கிறார்கள், பல திரைப்படங்களின் வெற்றிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் பல முறை திரைப்பட நிகழ்வுகளில் சொல்லி இருக்கிறோம். மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறோம். நமது சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடங்களுக்கும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது நமது சங்கத்தின் நோக்கம் இல்லை.அதே போல, அப்படிப்பட்ட நடுநிலையான ஊடங்கங்களின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும்  திரைப்பட  தயாரிப்பாளர்களுக்கும் எதிரானது அல்ல நமது சங்கத்தின் இந்த செயல்பாடு. எனவே வழக்கு மன்றத்தில் இது குறித்து ஒரு சரியான வழிமுறை (Guidelines) வரும் வரை, தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கான PRO-வுக்கு பரிந்துரைக்கும், டெலிவிஷன், பத்திரிக்கை, யூ-டியூப் (YouTube) சேனல்கள், வலைத்தளங்கள், சோசியல் மீடியா Influencer-கள், Press Show-வுக்கு வந்து, திரைப்படங்களை பார்த்து விமர்சனங்களை வெளியிடுவதில், எந்த எதிர்ப்பும் நமது சங்கத்தில் இருந்து இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே திரைப்பட தயாரிப்பாளரின் அனுமதியோடு Press Show-வுக்கு மேலே குறிப்பிட்டவர்கள் வந்து  திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யலாம். விரைவில் சட்டரீதியாக, நீதிமன்றத்தில் இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படும் என்று நம்புகிறோம்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே நமது சங்கம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் பொருளாளர் தனஞ்ஜெயன் பற்றி ஊடகங்களில் வெளிவந்த தவறான செய்திகளுக்கு எதிரான நடவடிக்கையை சங்கத்தின் வக்கில் குழு மூலம் எடுக்க தொடங்கியுள்ளது நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டிசம்பர் 7 ஆம் தேதி
முரளி கிருஷ்ணா ஜே
ரித்யம் லீகல் நிறுவனம்
வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில்
இந்த பொது அறிவிப்பு திரு. ஜி. தனஞ்செயனின் அறிவுறுத்தலின் பேரில் எங்கள் சட்ட நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
 ஜி. தனஞ்செயன் ஒரு புகழ்பெற்ற திரை பிரமுகர், தேசிய அளவில் சிறந்த புத்தக ஆசிரியர் மற்றும் சிறந்த விமர்சகர் என்கிற அடிப்படையில் தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர்.
கடந்த பத்து வருடங்களாக திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், திரைப்பட ஆலோசகராகவும் இருந்து வரும் அவர் தற்போது நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் செயலாற்றுகிறார்.
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸின் ஆலோசகராகவும்  ஜி. தனஞ்செயன் உள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம்ஸில்
 ஜி. தனஞ்செயனின் பங்கு திரைப்பட விளம்பரம் மற்றும் வெளியீடு தொடர்பானது மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தயாரிப்பு அல்லது வணிகம் குறித்து முடிவெடுப்பதில் அவர் ஈடுபடுவதில்லை.
விமர்சனங்கள் என்ற போர்வையில் திரைப்படங்கள் மற்றும் ஆளுமைகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான  முயற்சிகளை நடப்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளது. சங்கத்தின் பொருளாளராக உள்ள  தனஞ்செயன், அலுவலக விதிமுறைகளை பின்பற்றி செயலாற்றி வருகிறார்.
உண்மை இவ்வாறு இருக்கையில், சங்கத்தின் தலைவர் பாரதிராஜாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அவருடைய டிஜிட்டல் கையொப்பத்தை  தனஞ்செயன் அனுமதி இன்றி தவறாக பயன்படுத்தி ஒரு கடிதத்தை வழங்கியதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தவறான செய்தி சிலரால் பரப்பப்படுகிறது. இது  தனஞ்செயன்  நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதோடு, இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எங்கள் வாடிக்கையாளரின் தொழில், வளர்ச்சி மற்றும் தொழில்துறையில் நற்பெயர் ஆகியவற்றுக்கு எதிரான தவறான நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
எனவே இது தொடர்பான அவதூறு பிரச்சாரங்களை அடுத்த 24 மணி நேரத்தில் நீக்குமாறு அதில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உண்மை செய்திகளை ஆதாரத்தோடு வெளியிடுமாறு ஊடகங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற அவதூறு பிரசாரங்கள் தொடர்ந்தால் விதிகளுக்கு உட்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி அவர்களிடம் பேசிய போது
ஒட்டுமொத்தஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை. தவறான, நேர்மையற்ற முறையில் செயல்படும் ஊடகங்களுக்கு எதிராக நியாயத்திற்கான நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டும். திரைப்படங்களை விமர்சன வரம்புக்குட்பட்டு விமர்சிக்கப்படுவது, கருத்து தெரிவிப்பதை நாங்கள் எதிர்க்கவோ, தடுக்கவோ முயற்சிக்கவில்லை. சினிமாவை வைத்து தொழில் செய்பவர்கள் அந்த தொழிலை பலவீனப்படுத்தும் வகையில் தனிமனித வெறுப்புகளுடன் செயல்படுவதை எப்படி அனுமதிக்க முடியும் என்றார்.
நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் தனஞ்ஜெயன் அவர்களிடம் பேசிய போது
சங்க முடிவுகளை அமுல்படுத்தும் நிர்வாகியாக செயல்படுவதை தனிமனித வெறுப்புடன் விமர்சிப்பதை எப்படி அனுமதிக்க முடியும். ஊடக சுதந்திரத்தை சங்கம் தடுக்கவில்லை. சினிமா தொழிலை, தயாரிப்பாளர்கள் நலனை பாதுகாக்கவே மலையாள சினிமா வழியில் சங்கம் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. திரைப்படங்களை நாகரிகமாக நேர்மையாக வரம்புக்குட்பட்டு விமர்சிக்கும் ஊடகங்களுக்கு ஆதரவாக எங்கள் சங்கம் இருக்கும் என்றவர், தனிமனித விமர்சனங்களுக்கு எதிராக சங்கத்தின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும், அதற்காகவே சட்டக்குழு ஒன்றை பணியில் அமர்த்தியுள்ளோம் என்றார்.
தமிழ் சினிமாவில் சங்கங்கள், திரைக்கலைஞர்கள் ஆகியோருக்கிடையே ஒற்றுமை இன்மை, ஒருமித்த கருத்து, கூட்டு முயற்சி இல்லாமல் இருந்த வந்த சூழல் தற்போது மாறியுள்ளது என கூறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் திரைப்பட விமர்சனங்கள் மட்டுமல்ல, திரைக்கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி தவறான செய்திகள், நாலாந்தரமானதனி மனித தாக்குதல்கள் ஊடகங்கள், மற்றும் யுடியுக்களில் வெளி வந்தால் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை சட்ட நிபுணர்கள் குழுவிடம் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.