வல்லான் – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை,அதைச் செய்தது யார்? என்கிற காவல்துறை விசாரணை.அந்த விசாரணை அதிகாரி தற்போது பணியில் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டவர்.அவர் விசாரணையை தனிப்பட்ட முறையில் தொடரும் போது என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லும் படங்கள் நிறைய வந்திருக்கின்றன.

அந்த வரிசையில் மற்றொரு படமாக உள்ள  படம்தான் வல்லான்.

இடைநீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரியாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி.அவருடைய உயரமும் உருவ அமைப்பும் காவல்துறை அதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாக இருக்கிறது.

பிடித்த பெண்ணைப் பிணமாகப் பார்க்கும்போது அவரும் கலங்கி நம்மையும் கலங்க வைக்கிறார்.
காதல் காட்சிகளில் கனிவு காட்டியிருக்கிறார்.

நாயகி தான்யா ஹோப்புக்கு குறைந்த அளவே காட்சிகள் என்றாலும் அதில் நிறைவாக இருக்கிறார்.பெண் பார்க்கும் படலத்தின் போது அவர் நடிப்பு சிறப்பு.

கவர்ச்சிக்கும் திரைக்கதை நகர்வதற்குமாக வருகிறார் ஹெபா பட்டேல்.இரண்டிலும் குறை வைக்கவில்லை.

வில்லனாக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே ஆகியோர் தங்கள் இருப்பைப் பதிய வைத்திருக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.இந்தத் திரைக்கதைக்கு பின்னணி இசை

மிக முக்கியம் என உணர்ந்து இசைத்திருக்கிறார்.

மணி பெருமாளின் ஒளிப்பதிவு,படபடப்பு பதற்றத்தைக் கொடுக்கிறது.

படத்தொகுப்பாளர் தினேஷ்பொன்ராஜ்,படம் வேகமாகப் பயணிக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருந்திருக்கிறார்.

வி.ஆர்.மணி சேயோன் எழுதி இயக்கியிருக்கிறார்.பழகிய கதைக்களம் என்கிற எண்ணம் எந்த இடத்திலும் வந்துவிடாதபடி காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பார்வையாளர்களின் யூகங்களைப் பொய்யாக்கிக் கொண்டே போவது பெரிய பலம்.

இயக்குநரும், நாயகன் சுந்தர்.சியும் படத்தின் தலைப்புக்குப் பொருத்தமானவர்கள் என்று காட்டியிருக்கிறார்கள்.