படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – ஏ.எம்.ஆர்.முருகேஷ், ஒளிப்பதிவு – சார்லஸ் தாமஸ், இசை – ஆர் 2 பிரதர்ஸ், படத் தொகுப்பு – அஜய் மனோஜ், பாடல்கள் – ஏ.எம்.ஆர்.முருகேஷ், இளைய வர்மன், சிவக்குமார், பி.எஸ்.சங்கரகுமார்,
‘வான்’ என்றால் ‘உலகம்’ என்றொரு அர்த்தமும் உண்டு. அந்த வகையில் 3 பேரின் உலகம்.. அதாவது 3 பேரின் வாழ்க்கையைக் கூறும் படம் என்ற நோக்கில் இதன் தலைப்பை நாம் வைத்துக் கொள்ளலாம்.
வேறு, வேறு நபர்களுடனன காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று ஒரே மருத்துமனையில் அட்மிட்டாகி உயிர் பிழைக்கிறார்கள் ஆதித்யா பாஸ்கரும், அம்மு அபிராமியும்.
வயிற்றில் குழந்தையிருக்கும் நிலையில் தான் ஆசைப்பட்டு காதலித்துத் திருமணம் செய்த அபிராமி வெங்கடாச்சலத்தை மூளை கட்டி நோய்க்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் காதல் கணவரான வினோத் கிஷன்.
40 வருடங்களாக ஒருமித்த தம்பதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் டெல்லி கணேஷ்-லீலா சாம்சன் தம்பதியினர். விதியின் விளையாட்டில் லீலா சாம்சனை இப்போது உயிர்க்கொல்லி நோய் தாக்கியிருக்கிறது. அதை அவரிடம் சொல்ல முடியாமல் தவித்த நிலையில், தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவருடைய ஆபரேஷனுக்காக பணம் தேடியலைகிறார் முதியவரான டெல்லி கணேஷ்.
இந்த மூன்று ஜோடிகளின் இந்தப் பிரச்சினைகள் எப்படி முடிகின்றன..? என்னவாக முடிகின்றன..? என்பதுதான் இந்த ‘வான் மூன்று’ படத்தின் திரைக்கதை.
தான் ஏழை என்பதால் தன்னைவிட்டுப் போன காதலியையும், காதலையும் மறக்க முடியாமல் விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞராக ஆதித்யா பாஸ்கர் அந்த சோகத்தையும், இன்னசென்ட் குணத்தையும் காட்டும் வகையில் நடித்திருக்கிறார். இவரும், இவரது அம்மாவான நக்கலைட் தனமும் பேசும் சில வசனங்களால் அந்தக் காட்சிகளை கை தட்டி ரசிக்க முடிகிறது.
இன்னொரு புறம் தன் காதலனின் புறக்கணிப்பால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அம்மு அபிராமியும், தன் சோக நடிப்பை மென்மையாக காட்டியிருக்கிறார். தன் அம்மாவின் வாழ்க்கைக் கதையைக் கேட்டுவிட்டு அவரை அணைத்துக் கொண்டு கண்ணீர்விடும்போது, தாயைப் புரிந்து கொண்ட மகளாகக் காட்சியளிக்கிறார் அம்மு அபிராமி.
வார்டு பாய் “யூரின், மோஷன் நல்லா போகுதா..?” என்று சத்தமாகக் கேட்க ஆதித்யாவும், அம்முவும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டு சிரித்துவிட்டு பல்பு வாங்குவது சுவாரஸ்யமான திரைக்கதை.
முறிந்து போன தன் காதலுக்கு ஒத்தடம் கொடுக்க, இன்னொரு தோல்வியடைந்த காதலால்தான் முடியும் என்பதை உணர்ந்த ஆதித்யா… அம்முவிடம் காதல் மொழி பேசுவதும், அதை வளர்ப்பதும் சிறப்பு. இந்தக் காதலுக்கு இறுதியில் கிடைக்கும் பாஸிட்டிவ் அப்ரோச் பாராட்டுக்குரியது.
காதல் திருமணம் செய்த அபிராமி, தன் தந்தையை சந்திக்கும் தருணத்திலும், தனக்கு வந்திருக்கும் நோயைக் கண்டு பயந்துபோய் காட்டும் நடிப்பும், மிகையில்லாதது. இவரது காதல் கணவராக நடித்திருக்கும் வினோத் கிஷன் அடக்கமே உருவாகக் காட்சியளித்து மாமனாரிடம் கோபப்பட்டு பின்பு அமைதியாகி பேசும்போது பரிதாப உணர்வை ஏற்படுத்துகிறார்.
அதே மாமனாரிடம் மருத்துவமனையில் மென்மையாகப் பேசி பழகும்போது “பாவம்யா” என்றே சொல்ல வைத்திருக்கிறார். அதேபோல் இவரது மாமனாராக நடித்தவரும் முதலில் சீற்றம் கொண்டவராக பின்பு, மகளின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் ஓடோடி வந்து பார்த்து பாசத்தைக் கொட்டும் காட்சியிலும் நெகிழ வைத்திருக்கிறார்.
முணுக்கென்றாலே ‘டைவர்ஸ்’ என்று ஓடும் இந்தக் காலத்திய இளசுகள் இடையே.. 40 வருடங்களாக ஒருமித்தத் தம்பதியினராக ஒருவருக்கொருவர் காதலாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியினராக டெல்லி கணேஷூம், லீலா சாம்சனும் நம் மனதைப் பெரிதும் கவர்ந்துவிட்டனர்.
லீலா சாம்சனுக்கு அவரது அமைதியான கை தொழுக வைக்கும் முகமும், பேச்சுமே கை கொடுத்திருக்கிறது. தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் கணவர் பி.பி. மாத்திரை சாப்பிட வேண்டுமே என்று அவர் தவிக்கும் தவிப்பில் இப்படியொரு மனைவி யாருக்குக் கிடைக்கும் என்று ஏங்க வைக்கிறார்.
அதேபோல் தன்னைத் தாக்கியிருக்கும் நோயைப் பற்றித் தெரிந்த பின்பும் எந்தவித பயமும் இல்லாமல் அடுத்து நடக்க வேண்டியது என்ன என்று கணவருக்கு கிளாஸ் எடுக்கும் விதத்தில் “இது சாதாரண பொம்பளையில்லப்பா” என்று சொல்ல வைக்கிறார்.
இத்தனை வருட நடிப்பின் உச்சக்கட்டமாக தனது தற்போதைய வயதுக்கேற்ற நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார் டெல்லி கணேஷ். மனைவியிடம் விஷயத்தை சொல்ல முடியாமல் தவிக்கும்போதும், கடன் கிடைக்காத ஏமாற்றத்தைத் தாங்கும்போதும், மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டி சிரிக்க, சிரிக்க பேசுவதும், மருமகளின் ஆதங்கத்தினால் மகனை வற்புறுத்த விரும்பாத தந்தையாகவும் தனது கதாப்பாத்திரத்தை தன் நடிப்பாலேயே செதுக்கியிருக்கிறார் டெல்லி கணேஷ்.
வினோத் கிஷன் கடைசியாக செய்த ஒரு வேலையைக் கேள்விப்பட்டவுடன் அவருடைய நண்பர் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு செய்யும் அந்த அணைப்பு, கை தட்டல் பெறுகிறது. படம் சொல்ல வந்த செய்தியை இந்த ஒரு காட்சியிலேயே சொல்லிவிட்டார் இயக்குநர்.
இதன் மொத்தப் படமும் மூன்று மருத்துவமனைகளில் நடப்பது போல் வைத்திருக்கிறார்கள். ஒரே மருத்துவமனை, ஒரே அறை என்றாலும் காட்சிக்குக் காட்சி வித்தியாசமான கோணங்களை வைத்து அந்தந்தக் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ்.
ஆர்-2 பிரதர்ஸின் இசையில் பாடல்கள் அந்த நேரத்திய உணர்வுகளை நமக்குக் கொடுக்கின்றன. பின்னணி இசை கதை, திரைக்கதைக்கு, நடிகர்களின் நடிப்புக்கு, முக்கியமாக ‘காதல்’ என்ற உணர்வுக்கு உயிர் கொடுப்பதைபோல் அமைந்துள்ளது.
திரைக்கதையில் வேகத்தை உண்டு செய்யாமலும், படத்தின் தன்மை கெடாமலும், மூன்றுவித கதைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வருவதைப் போல் அழகாக படத் தொகுப்பு செய்துள்ளார் அஜய் மனோஜ்.
ஏற்கெனவே தமிழ் சினிமாவில் மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘நீர்க்குமிழி’ என்ற சாகா வரம் பெற்ற திரைப்படங்கள் இடம் பிடித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் இப்போது சேர்ந்துள்ளது.
படம் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் மிதமான வேகத்தில், செறிவானவிதத்தில் நகர்ந்திருப்பது, இது போன்ற மெஸேஜ் சொல்லும் படங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கிறது.
மூன்று கதைகளுக்கும் அடிப்படையானது காதல். காதலால் விளைந்த விளைவுகள்.. நடிகர், நடிகைகளின் பேச்சுக்களாலேயே அவர்களது காதலை வெளிப்படுத்தியிருக்கும் விதம், ரசிக்கும்படியான வசனங்கள் மூலமாக ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
நடிகர், நடிகையரின் நடிப்புகூட மிகையில்லாமல் அளவோடு இருப்பதும், காட்சிகளை அதிகமாக நீட்டி முழக்காமல் சின்ன, சின்னதாக வைத்து அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்திக் கொண்டே போய், அடுத்தது என்ன என்பது மாதிரியான சின்ன எதிர்பார்ப்பையும் கொடுத்து படத்தை இறுதி வரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இன்றைய நிலையில் காதல் என்பது திருமணத்திற்கு முந்தையதாக மட்டும் இல்லாமல், பின்பாகவும், வாழ்க்கை முழுவதுமாக இருக்கக் கூடியது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் வகையில் இந்தப் படம், இளைஞர்கள் மட்டுமில்லாமல் அனைத்து வயதினருக்கும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது.