சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் நடிகர், இயக்குநராக அறிமுகமானவர் சசிக்குமார். நட்பு, காதல், விசுவாசம், நம்பிக்கை துரோகத்தை அழுத்தமாக பேசிய படம். அதனை கடந்து அரசியல் அதிகாரம் பற்றி நுட்பமாக பேசியதுடன் அதற்கான குறியீடுகளையும் சுப்ரமணியபுரம் படத்தில் வைத்திருந்தார் சசிக்குமார். தொடர்ந்து அவர் நடித்த படங்களின் திரைக்கதை எல்லாம் நட்பு, துரோகம் இவற்றை பற்றியதாகவே இருந்தது. முதல் முறையாக நேரடியாக அரசியல் பேசும் நந்தன் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் சசிக்குமார். இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நடித்த படம், இதுவரை பணத்தேவைக்காக நடித்த நான் உணவை ருசித்து சாப்பிடுவதை போன்று ரசித்து நடித்த படம்’ நந்தன்’ எனக் கூறியிருக்கிறார் சசிக்குமார். ‘அயோத்தி’, ‘கருடன்’ என இரண்டு வெற்றி படங்களில் நடித்திருக்கும் சசிகுமார் நடிப்பில் செப்டம்பர் 20 ஆம் தேதிவெளிவரவிருக்கிறது ‘நந்தன்’ திரைப்படம். ‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இரா.சரவணன் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் நந்தன். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின்ட்ரெய்லர் நேற்றுவெளியிடப்பட்டு உள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
நவீனம் காணாதகிராமம், கிராமத்து மனிதர்களுக்கே உரிய அழுக்கான ஆடைகள், கறைபடிந்த பற்கள், முகம் முழுக்க தாடியுடன் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சசிகுமார். தன் ஊரை சேர்ந்தஅரசியல்வாதியுடன் சசிகுமாருக்கு மோதல் ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நிகழும் பரபர சம்பவங்களே நந்தன் படத்தின் திரைக்கதையாக இருக்கும் என்பதை டிரைலர் உணர்த்துகிறது. எளிய மனிதர்களையும், அவர்களின் வாழ்வியலையும், அவர்கள் மீது செலுத்தப்படும் அத்துமீறும் அதிகாரம் குறித்து படம் பேசும் என்பதை காட்சிகள் உணர்த்துகின்றன.
“போட்டியே இல்லேங்கிறது பெருமை இல்லங்க. போட்டி போட்ற ஜனநாயகம் தான் பெருமை”,
“ஆள்றதுக்கு தான் அதிகாரம் தேவைன்னு நெனைச்சு ஒதுங்கியிருந்தேன். இங்கே வாழ்றதுக்கே அதிகாரம் தேவை”
போன்ற வசனங்கள் திரைப்படம் முழுக்க அரசியல் பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதற்கான முன்னோட்டமாக இருக்கிறது.
பெண்களின் உரிமை அவர்களின் முக்கியத்துவம் அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.