விஜய்யை விமர்சிக்கிறதா விடுதலை ட்ரைலர் ?

அரசியல் பேசும் தமிழ் சினிமாக்கள் தமிழில் குறைவாகவே தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றில் முழுமையான அரசியல், சித்தாந்த தெளிவு இதுவரை வெளியான படங்களில் இருந்தது இல்லை. அவ்வப்போதைய மாநில அரசியலை கதாநாயகனை முன்னிறுத்தும் வணிக நோக்கத்திற்காக தமிழ் சினிமா இயக்குநர்களும், கதாநாயக நடிகர்களும் இதுவரை பயன்படுத்தி வந்துள்ளனர். சினிமா வணிகத்திற்கு, திரையரங்க வசூலுக்கு பயன்படாத போது அரசியல் பேசும் சினிமாக்கள் தயாரிப்பதை தமிழ்சினிமா தவிர்த்து விடும் என்பது கடந்த கால வரலாறு.
 வலதுசாரியாக இருந்தாலும் புரட்சி, கம்யூனிசம், தமிழ் தேசியம் போன்ற விஷயங்களை திரைப்படங்களில் பயன்படுத்துவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. அந்த வரிசையில் கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில்  வெளியானவிடுதலை திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் தொடக்க காட்சி அப்படித்தான் இருந்தது. ஆனால் படம் தனிமனித காதல், காவல் துறை அடக்குமுறை என தடம்புரண்டு இறுதிக் காட்சியில் இடது சாரியாக விஜய் சேதுபதி முன்னிறுத்தப்படும் காட்சியுடன் படம் நிறைவுற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 20 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை வெளியானது. முதல்பாகத்தில் படம் முழுக்க நடிகர் சூரி ஆக்கிரமித்திருந்தார். இரண்டாம் பாகம் முழுவதும் விஜய் சேதுபதி ஆக்கிரமித்திருக்கிறார் என்பதை முன்னோட்டம் உணர்த்துகிறது. படத்தில் அரசியல் உரையாடல் அதிகம் இருக்கும், குறிப்பாக சமகால தமிழ்நாடு அரசியல் இந்த உரையாடலில் இடம்பிடித்திருக்கும் என்பதை முன்னோட்டம் உணர்த்துகிறது. திரைப்பட நடிகர்கள் சித்தாந்தம் இல்லாமல், அது பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் தனது சினிமா ரசிகர்களை நம்பி கட்சி தொடங்குவது படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளதை முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் உறுதிப்படுத்துகிறது.
முன்னோட்டம் எப்படி?
நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு என விஜய் சேதுபதியின் வசனத்துடன் தொடங்குகிறது முன்னோட்டம்.
இறுக்கமான, அடர்த்தியான நிறத்தில் திரையில் விரியும் முன்னோட்டத்தில் புரட்சிகர வசனத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி – மஞ்சு வாரியாருக்கு இடையிலான காதலை நோக்கி பயணிக்கிறது.  காதல் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன.

கம்யூனிஸ்ட்டாக கிஷோர், அனுராக் காஷ்யப்பின் எதிர்பாராத வருகை , அசுரன்கென் கருணாஸ் தோற்றம் முன்னோட்டத்தை கவனிக்க வைக்கிறது. ட்ரெய்லரின்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், திராவிட அரசியலின் தெளிப்பு, கம்யூனிஸ்ட் கொடிகளின் அணிவகுப்பு இடம் பெற்றுள்ளதை பார்க்கும் போது சகல தரப்பின் கவனத்தை படத்தின் மீது ஈர்க்கும் முயற்சியாக உணர வைக்கிறது முன்னோட்டம்
 முழுக்க முழுக்க விஜய் சேதுபதிக்கான படமாக தெரிந்தாலும், ட்ரெய்லரின் இறுதியில் சூரி என்ட்ரி கொடுக்கிறார்.
இடது சாரிகள் அதிகமாக பொது மேடைகளில் பயன்படுத்தும்
“வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும் ” என்கிற வசனம் தீவிரவாத அரசியலை பேசும் படமாக விடுதலை இருக்கும் என தெரிகிறது.
,“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என்கிற வசனம்  நடிகர் விஜய் புதிதாக தொடங்கி இருக்கும் கட்சி பற்றிய விமர்சனமாக இருக்குமோ என கருத வேண்டியுள்ளது.
மொத்தத்தில் சர்வதேசத்திற்கு கம்யூனிசம், தமிழ்நாட்டிற்கு திராவிடம், நடிகர்களின் ரசிகர்களின் விவாதத்திற்காக தத்துவம் இல்லாத தலைவர்கள்’ என படத்தின் வெற்றிக்காக இயக்குநர் வெற்றிமாறன் சமகால தமிழ்நாடுஅரசியல் பேசியிருக்கிறார்.
இவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருப்பது இளையராஜா இசை என்பது குறிப்பிடத்தக்கது.