விஜய் கூறிய குட்டிக்கதை எப்படி?

விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஒரு குட்டி கதை’ பாடல் ரிலீஸாகியிருக்கிறது. காதலர் தினத்தன்று ரிலீஸாகியதால் ரொமாண்டிக் பாடலாக இருக்குமென்றும், விஜய்க்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அடுத்து உடனடியாக ரிலீஸாவதால் மிகப்பெரிய அரசியலை பேசும் பாடலாக இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இளைஞர்களுக்கு அட்வைஸ் சொல்லும் ஒரு ஜாலியான பாடலாக மட்டும் அமைந்திருக்கிறது.

அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைக்க விஜய் பாடியிருக்கிறார்.  முழுக்க முழுக்க ஆங்கிலப் பாடல்களின் தொகுப்பாகவும், ஆங்காங்கே தமிழ் வார்த்தைகளும் அடங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட ‘ ஒய் திஸ் கொலவெறி’ பாடலைப் போலவே இருக்கிறது. “டிசைன் டிசைனாக பிரச்சினைகள் வந்து போகும் ஆனால் கூலாக இருங்கள்” என்று விஜய் சொல்லும்போது பின்னணியில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், ஏற்றத்தாழ்வு, ஊழல், வறுமை, வன்முறை ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவற்றுடன், சமீபமாக உலகளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் கொரோனாவைக் கூட விட்டுவைக்கவில்லை.

வெறுப்பவர்கள் வெறுத்துக்கொண்டே தான் இருப்பார்கள். அதனை அமைதியாக தவிர்த்துவிடுங்கள்” என்று ட்விட்டரில் இயங்கும் விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வதாகவும் சில வரிகள் அமைந்திருக்கின்றன.

மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு அசோசியேட்டாக பணிபுரியும் லோகி என்பவர் பேப்பர் ஆர்ட் வடிவில்  இந்த அனிமேஷன் வீடியோவை முழுவதுமாக உருவாக்கியிருக்கிறார். இந்த வீடியோவை எழுதி-இயக்கியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மிகச் சாதாரணமாக நான்கு ஃபோட்டோக்களையும், பாடலின் வரிகளையும் மட்டும் வைத்து உருவாக்கப்படும் சிங்கிள் பாடல்களைவிட இந்த முயற்சி அற்புதமாக இருக்கிறது. இது மற்ற படங்கள் இனி வெளியிடும் பாடல்களுக்கான தரத்தின் மீட்டரை உயர்த்தியிருக்கிறது.