விடா முயற்சி படத்தால் லைகாவுக்கு மேலும் ஒரு சிக்கல்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் குமார்,த்ரிஷா,அர்ஜூன்,ஆதவ்,

ரெஜினா உட்பட பலர் நடிக்கும் படம் விடாமுயற்சி.அனிருத் இசையமைக்கிறார்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு  இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இன்னும் பத்துநாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதென்றும் அதற்காகப் படக்குழுவினர் ஸ்பெயின் புறப்பட்டுச் செல்வதாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளியானது.அங்கு கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்புக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறதாம்.

இந்நிலையில் இன்னொரு வெளிநாட்டு விபரீத சிக்கலில் விடாமுயற்சி சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அது என்ன?

விடாமுயற்சி ஓர் ஆங்கிலப்படத்தைத் தழுவி எடுக்கப்படுகிற படம் என்று செய்திகள் வந்தன.அச்செய்திகள் சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் தரப்பில் எந்தவொரு பதில் கூறாமல் மெளனம் காத்தனர்.

ஆனால்,அச்செய்திகளில் இடம்பெற்ற ஆங்கிலப் படத்தை தயாரித்த நிறுவனம் இந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு விடாமுயற்சி
படம் குறித்த விவரங்களைத் தரும்படி கேட்டுள்ளனர். கொடுப்பதும், தர மறுப்பதும் உங்கள் உரிமை ஆனால்,பட வெளியீட்டுக்குப் பிறகு எங்கள் படத்தை ஒத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கின்றனர்.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான தயாரிப்பு நிறுவனம், படத்தின்இயக்குநர் மகிழ்திருமேனியிடம் இதுகுறித்துக் கேட்டதாகவும் அவர் அந்தப்படத்தின் பாதிப்பில் இருந்துதான்இந்த படத்தின் திரைக்கதையை எழுதினேன் என்று ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இந்தச் சிக்கல் முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பு இதை சுமுகமாக முடித்துவிடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்களாம்.

இதனால் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அதற்குப் பிறகான பணிகள் ஆகியனவற்றோடு சம்பந்தப்பட்ட ஆங்கிலப் பட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு திரைக்கதையில் செய்யப்பட்டுள்ள மாறுபாடுகளை விளக்கிச் சொல்லி அவர்களிடமிருந்து எந்தச் சிக்கலும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய வேலையிலும் இயக்குநர் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாண்டு தீபாவளியின்போதே வெளியாகியிருக்க வேண்டிய படம் இது.இயக்குநரின் தாமதத்தால் அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் போயிருக்கிறது.இதனாலேயே அதிருப்தியில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம்,இப்போது எதிர்பாரா விதமாக வந்திருக்கும் இந்த விபரீத சிக்கலால் பயந்து போயிருக்கிறதாம்.

இயக்குநர்கள் சொல்லும் கதையை நம்பி கோடிக்கணக்கில்பணத்தை முதலீடு செய்து விட்டு, எங்கிருந்து என்ன பிரச்சினைகள், நெருக்கடிகள் வருமோ என்கிற பதட்டத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  வெளியீடுவரை இருக்க வேண்டியதாக உள்ளது.