விமானம் – திரைவிமர்சனம்

சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கின்றன.அப்படிப்பட்ட ஒரு கதைக்கருவைக் கொண்டதுதான் விமானம்.வறுமையோடு போராடும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனியின் ஒரே மகன் மாஸ்டர் துருவன். அவனுக்கு விமானம் மீது அதீத ஈடுபாடு. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்றும் ஆசை.அந்த ஆசையை நிறைவேற்றப் போராடுகிறார் சமுத்திரக்கனி. அது நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் படம்.மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, அதற்கு நூறுவிழுக்காடு நியாயமாக இருக்கிறார். மகனின் ஆசையை நிறைவேற்றவியலாமல் போய்விடுமோ என்று கலங்கி நிற்கும் காட்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார்.சிறுவன் துருவனும் சமுத்திரக்கனிக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.அவரின் குழந்தைமை நம்மைக் குமுறவைக்கிறது.ஒரு இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் மீராஜாஸ்மின் கவனிக்க வைக்கிறார்.அனுசுயாபரத்வாஜ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோருக்குப் பெரிய வேலைகள் இல்லையென்றாலும் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.சரண் அர்ஜுனின் இசையினால் கதைக்குப் பலம் சேர்க்க முயன்றிருக்கிறார்.விவேக்கலேபுவின் ஒளிப்பதிவால் படம் முடிந்த பின்னரும் கண்முன்னால் விமானங்கள் பறக்கின்ற உணர்வு.தமிழில் வசனங்கள் எழுதியிருக்கும் பிரபாகர் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.சிவபிரசாத் யானாலா இயக்கியிருக்கிறார்.அப்பா மகன் ஆகிய இருவரை மட்டும் வைத்து உறவுகளின் கனத்தையும் உணர்வுகளின் வலியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.அளவுக்கதிகமான சோகங்களைக் கொண்டிருந்தாலும் பல இடங்களில் தொய்வு இருந்தாலும் அடிப்படை அன்பால் நிறைந்திருப்பது படத்துக்குப் பலம்