வில்லிராணி – விமர்சனம்

பாலியல் தொழில் செய்யும் சாயாசிங்குக்கு அதனால் ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. அதன்பின் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறொரு வேலைக்குப் போய் குழந்தையை வளர்த்து வருகிறார். பெரும் சோதனையாக அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நோய் வந்துவிடுகிறது.அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் தந்தையின் எலும்புமஜ்ஜை இருந்தால்தான் முடியும் என்கிற நிலை.அதனால் அந்தக் குழந்தையின் தந்தை யார்? என்று தேடுகிறார் சாயாசிங்.குழந்தையின் தந்தையைக் கண்டடைந்தாரா? குழந்தைக்கு சிகிச்சை நடந்ததா? என்பனவற்றைச் சொல்லியிருக்கும் படம்தான் லில்லிராணி.படத்தில் குழந்தையின் பெயர் லில்லி. சாயாசிங்கின் பெயர் ராணி. அதனால் லில்லிராணி.சாயாசிங் தொடக்கத்திலிருந்தே கவனம் ஈர்க்கிறார்.வேடம்தான் பாலியல் தொழிலாளி வேடம்.ஆனால் அவர் நம் அண்டைவீட்டுப்பெண் போல் பாந்தமாக இருக்கிறார். தாய்ப்பாசத்தை நடிப்பில் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.பெரும்தொகை இருந்தால்தான் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில்,இருக்கிற வரையில் சந்தோசமா வச்சிருக்கேன் என்று சொல்லிக் கலங்குமிடத்தில் நம்மையும் கலங்கவைத்துவிடுகிறார்.காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் தம்பிராமையா அருமை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார். படத்தின் திரைக்கதை நகர அவருடைய காவல்துறை புத்தியே உதவி செய்கிறது.அமைச்சர் மகன் என்கிற இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் துஷ்யந்த்தும் நன்றாக நடித்திருக்கிறார். தம்பிராமையாவைக் கன்னத்தில் அறைகிற காட்சியில் அட்டகாசம் செய்திருக்கிறார். சாயாசிங் வீட்டுக்கு ஓடிவந்து பக்கத்துவீட்டுத் துணிகளையெல்லாம் பெட்டியில் வைக்க முயலும் காட்சியில் அவருடைய நடிப்புத்திறன் வெளிப்படுகிறது.ஒரு காட்சியில் வந்தாலும் தன் தனித்தன்மையைக் காட்டிவிட்டார் ஜெயப்பிரகாஷ்.சிவதர்ஷனின் ஒளிப்பதிவு குறுகிய இடங்களிலும் நிறைவாக அமைந்திருக்கிறது.ஜெர்விஜோஷ்வா இசையில் பாடல்கள் கேட்கலாம். சேரனின் பின்னணி இசை அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.விஷ்ணுராமகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். புதிய கதைக்கரு அளவான திரைக்கதை நறுக்கென்ற முடிவு ஆகியனவற்றால் கவனம் ஈர்க்கிறார்.TAGS: Chaya singh Dushyanth Jayaprakash Lilly Rani Senthil kandiar Thambi Ramaiah Vishnu ramakrishnan