ஹரா திரைவிமர்சனம்

பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் படம் ஹரா.மனைவி அனுமோல் மருத்துவம் படிக்கும் மகள் அனித்ரா நாயர் ஆகியோரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன்.திடீரென மகள் தற்கொலை செய்து கொள்கிறார்.அதனால் ராம் என்கிற தனது பெயரை தாவூத் இப்ராகிம் என்று மாற்றிக் கொண்டு மகள் தற்கொலைக்கான காரணத்தைத் தேடிப் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறார் என்கிற எண்ணம் வராத வண்ணம் நடித்திருக்கிறார் மோகன்.உடலில் சில மாற்றங்கள் தெரிந்தாலும் நடிப்பில் அதை மறக்கச் செய்திருக்கிறார்.
சில காட்சிகளே வந்தாலும் பாசமான குடும்பத் தலைவி வேடத்தில் பாந்தமாக நடித்து மனதில் நிறைந்து நிற்கிறார் அனுமோல்.மகளாக நடித்திருக்கும் அனித்ரா நாயரும் தன்னுடைய மரணம்தான் படத்தை நகர்த்தும் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சுரேஷ்மேனன் பாத்திரம் ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் தன் நடிப்பால் அதைப் புதிது போல் ஆக்கியிருக்கிறார்.
வேலுநாயக்கராக சாருஹாசன்,வழக்குரைஞராக யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மொட்டை ராஜேந்திரன்,வனிதாவிஜயகுமார்,ஆதவன்,சிங்கம்புலி உள்ளிட்டோர் வந்து போகின்றனர்.
ரஷாந்த் அர்வினின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பிரகாத் முனுசாமி,மனோதினகரன்,மோகன்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கதைக் களத்துக்குத் தேவையான அளவு காட்சிகள் அமைந்திருக்கின்றன.
ஒளிப்பதிவில் ஒரு பங்கு, சண்டைப் பயிற்சி அமைத்து பாடல்கள் எழுதியதோடு கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விஜய்ஸ்ரீஜி.சொன்ன விதத்தில் பல குறைகள் இருக்கின்றன.ஆனாலும், மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்துவது மதநல்லிணக்கம் பேசுவது என்கிற நல்ல விசயங்களைக் திரையில் சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.