ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் வில்லன் இல்லாத திரைக்கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் இயக்குநர் விக்ரமன். அவரது சிஷ்யர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் விக்ரமன் மகன் அறிமுகமாகியிருக்கும் படம்தான் ஹிட் லிஸ்ட் படம் எப்படி இருக்கிறது ……
எந்த உயிரையும் கொல்லக்கூடாது எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது என்கிற வள்ளலார் வழியைத் தீவிரமாகக் கடைபிடித்து வரும் கதாநாயகன் விஜய்கனிஷ்காவுக்கு இரண்டு கொலை செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடி ஏற்படுகிறது.இவருக்கு ஏன் இந்த நெருக்கடி? நெருக்கடி கொடுப்பது யார்? அதன் பின் நடப்பவை என்ன? என்கிற கேள்விகளுக்கான பதிலாக திரையில் விரிகிறது ஹிட்லிஸ்ட்.

விஜய்கனிஷ்கா அறிமுக நடிகர் என்று சொன்னால்தான் தெரியும்.தேர்ந்த நடிகர் போல், அப்பாவித்தனம் ஆக்ரோசம் ஆகியனவற்றோடு காதல் உணர்வுகள், அம்மா, தங்கை மீதான பாசம் என உணர்வுகளை  வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.சரத்குமார்,கெளதம்மேனன் என மூத்த நடிகர்களுடனான காட்சியில் பதட்டப்படாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.காவல்துறை அதிகாரியாக வரும் சரத்குமார், மருத்துவமனை அதிகாரியாக வரும் கெளதம்மேனன், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, ராமச்சந்திரராஜு ஆகியோர் நடித்திருப்பது திரைக்கதைக்கு வலுச் சேர்த்திருப்பது மட்டுமின்றி திரையரங்குகளுக்கு கூட்டத்தை வர வைக்கவும் தேவையாக இருக்கிறது.ஸ்முருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அனுபமாகுமார் ஆகியோர் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

திரைக்கதையை நகர்த்திச் செல்ல, நாயகனின் அம்மாவாக வரும் சித்தாராவும் தங்கையாக வரும் அபிநட்சத்திராவும் பயன்பட்டிருக்கிறார்கள்.
அவர்களும் அந்தப் பொறுப்புடன் நடித்திருக்கிறார்கள்.ரெடின் கிங்ஸ்லி, பால் சரவணன் ஆகியோருக்கு ரசிகர்களைச் சிரிக்க வைக்க வேண்டிய வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் குறை வைக்கவில்லை.

கே.இராம்சரண் ஒளிப்பதிவில் காட்சியமைப்புகள் சிறப்பாக  அமைந்திருக்கின்றன.
சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்ன்ணி இசை படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டியிருக்கிறது.

சமுதாய அக்கறை கொண்ட இந்தக்கதையை தேவராஜ் என்பவர் எழுதியிருக்கிறார்.

சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே.கார்த்திகேயன் ஆகிய இருவர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்கள்.

நாயகனை மிரட்டும் முகமூடி மனிதன் யார்? அவர் ஏன் இப்படிச் செய்கிறார்? என்பதன் மர்ம முடிச்சை இறுதிவரை அவிழாமல் திரைக்கதையை நகர்த்தியிருப்பது சிறப்பு.