அரசியலை மையப்படுத்தி நகைச்சுவையாக டிஎன் 2026 என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரில் “சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது!” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிடுகிறது. விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்று இருப்பது போல தெரிகிறது என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் காரசாரமாக பதிவிட்டு வருகிறார்கள். நட்டி நட்ராஜ்ஜின் தோற்றம் விஜய் போன்றும், தம்பி ராமைய்யாவின் தோற்றம் தவெக பொதுச்செயலர் என். ஆனந்த் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், டீசர் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார்.வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் நடிகர் விஜய்யை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவும்கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், டிஎன் 2026 படக்குழு நேற்றுமாலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந் நிகழ்வில் இயக்குனர் உமாபதி ராமையா கூறுகையில், “இது யாருக்கும் எதிரான படம் இல்லை. நாங்கள் அவமதிப்பதாக சொல்லப்படும் நபர் ஒரு சிங்கம். சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா? இதை வெறும் படமாக மட்டும் பாருங்கள், அரசியலாக்காதீர்கள்” என்றார்.
கதை எழுதியுள்ள தம்பி ராமையா கூறுகையில்
“இந்தப் படத்தை எடுத்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால், இன்றைய அரசியல் சூழல் இத்துடன் ஒத்துப்போகிறது. நாங்கள் எடுத்தது காட்சியாக வந்திருக்கிறது. அதுதான் ஆச்சரியம்.
10 நாட்கள் முன் நடந்த சம்பவத்தை படமாக்குவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும். அப்படியென்றால், இப்போது நடக்கும் சம்பவங்களை எப்படி இப்போதே படமாக்க முடியும். வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா தேர்தல் பிரச்சாரத்தின் போது பாட்டில் ஒன்று வீசப்பட்டது. அதை காட்சிப்படுத்தி படத்தில் சேர்க்க வேண்டுமென்றால் 90 நாட்கள் ஆகும். ஆனால், இது நம் படத்தில் இருக்கிறது. இதை நாங்கள் எங்கள் குழந்தைப் பருவத்தில் நடந்த சம்பவத்தைத்தான் படத்தில் பதிவு செய்திருக்கிறோம். நாங்கள் படத்துக்காக எடுத்தது, தற்போது சம்பவங்களாக நடைபெறுகிறது. அதனால், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்