ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஜப்பானில் இருக்கும் துருவ் விக்ரம் நினைவலைகளில் இருந்து படம் திரையில் விரியத் தொடங்குகிறது. நாயகனின் பள்ளிப் பருவம், பி.டி ஆசிரியரின் உத்வேகத்தால் மெல்ல அவன் கபடியில் ஆர்வம் செலுத்தத் தொடங்குவது, அவனின் குடும்பப் பின்னணி, சாதி அரசியலுக்கு இடையே சிக்கித் தடுமாறும் அவனது லட்சியம் என நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதை பார்வையாளனை எங்கும் நகர விடாதபடி இழுத்துக் கொள்கிறது.
பேருந்தில் ஒரு ஆடு எதிர் தரப்பினரின் காலில் சிறுநீர் கழித்த விவகாரம் ஒரு நிமிடத்தில் எப்படி மிகப் பெரிய வன்முறையாக மாறுகிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
வழக்கம் போல இந்தப் படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜின் கதாபாத்திர தேர்வு வியக்க வைக்கிறது. துருவ் விக்ரமின் தந்தையாக பசுபதி வரும் ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார். அமீர், லால், ரஜிஷா விஜயன், அருவி மதன் எனநடிகர்கள் யாரையுமே வீணடிக்காமல் செவ்வனே பயன்படுத்தி இருக்கிறார்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும், எழிலரசுவின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. காளமாடன் கானம், தென்னாடு பாடல்கள் சிறப்பு. கபடி தொடர்பான காட்சிகளில் எடிட்டர் சக்தி திரு தனித்து தெரிகிறார்.
பாடல்களை மான்டேஜ் ஆக பயன்படுத்தி இருந்தாலும் கூட அவை பெரும்பாலும் வேகத் தடைகளாகவே தோன்றுகின்றன. அனுபாமா, துருவ் இடையிலான காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வை தருகின்றன. க்ளைமாக்ஸுக்கு முன்னால் போலீஸ் திடீரென நல்லவர்களாக மாறுவது, இந்திய அணியில் துருவ் தேர்வானதே அப்போதுதான் முடிவாகி இருக்கும்போது அதை ஒரு போலீஸ்காரர் சொல்வது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை. இவற்றில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ரத்தமும் சண்டையும் அன்றாடம் ஆகிப் போன ஒரு மண்ணில் இருந்து தன் முன்னால் இருந்த அத்தனை தடைகளையும் உடைத்து ஒருவன் எப்படி முன்னேறிச் சென்றான் என்ற கதையை நேர்த்தியாகவும், அழுத்தமாகவும் சொல்லி மீண்டும் ஒரு புறக்கணிக்க முடியாத வெற்றியை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்மாரி செல்வராஜ்.