துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ) , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த ஆக்க்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக, இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.