நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,
‘ நீயே விடை’ என்ற பெயரில் சென்னையில் செயல்பட்டு வரும் நிறுவனம், எனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற பட்டம், எனது பிரபல வசனங்கள் ஆகியவற்றை அனுமதி இன்றி பயன்படுத்தி டி-ஷர்ட்களை தயாரித்து வணிகரீதியாக விற்பனை செய்து வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த நிறுவனம் மட்டுமல்ல வேறு எந்த நிறுவனங்களும் என்னுடைய பெயர் புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜனவரி 12) விசாரணைக்கு வந்தது.
அப்போது கமல்ஹாசன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பாராசரன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி, வணிக ரீதியாக கமல்ஹாசன் பெயர் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தப்படுவதற்கு தடை வதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அனுமதி இன்றி வர்த்தக ரீதியில் கமல்ஹாசன் பெயர் புகைப்படங்கள் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அனுமதி இன்றி வர்த்தக ரீதியில் கமல்ஹாசன் பெயர் புகைப்படங்கள் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தனர்.
இந்த மனுவுக்கு நீயே விடை நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
அதேசமயம் கார்ட்டூன் வடிவங்களில் கமல் புகைப்படங்களை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உத்தரவு குறித்து தமிழ் ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கமல் தரப்புக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்