நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நிகழ்வில்நடிகர் இளவரசு பேசுகையில்,
“தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்,” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,
“கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். ‘படையாண்ட மாவீரா’ படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்,” என்றார்.
‘படையாண்ட மாவீரா’ படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில்,
“இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையில் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். அவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’.
இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார். எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்கள்வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.
இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள். என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
“தம்பி கெளதமன் மிகுந்த உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் ‘படையாண்ட மாவீரா’ என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார்.
கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.